வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று இடர் தொடர்பான மீளாய்வு!

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று இடர் தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடல், வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது, அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கிராம சேவையாளர்கள், சுகாதாரத் துறையினர் மற்றும் பொலிஸார் இணைந்து, கொரோனா தடுப்பு விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என ஆளுநரால் வலியுறுத்தப்பட்டது.

அத்துடன், வைத்தியசாலைக் கழிவுகளை அகற்றும் முறை தொடர்பாக பொதுவான ஒரு திட்டத்தை தயாரிக்குமாறும் ஆளுநர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மேலும், மாணவர்களிடையேயும் கொரோனா சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், அரச மற்றும் தனியார் பேருந்துகளில் பதிவுசெய்யப்பட்ட பேருந்தின் இலக்கத்தை உட்புறத்தில் கட்டாயமாகக் காட்சிப்படுத்த வேண்டுமென கூறியதோடு, பயணிகள், தாம் பிரயாணம் செய்யும் பேருந்தின் இலக்கத்தை இலகுவாக குறித்து வைக்கும்படியும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கும் உரிய சட்ட நடவடிகைகளை இறுக்கமாக நடைமுறைப்படுத்துமாறு ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor