வடக்கு நோயாளிகள் அவதி

அரசாங்க வைத்தியசாலைகளின் வைத்தியர்களால் இன்று திங்கட்கிழமை (04) முன்னெடுக்கப்பட்ட அரைநாள் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் காரணமாக, வடமாகாண நோயாளிகளும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு வருதல், இந்தியாவுடன் எட்கா உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல் என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் வேறு சில கோரிக்கைகளை முன்வைத்தும், நாடளாவிய ரீதியில் அரச வைத்தியர்கள் அரைநாள் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

மகப்பேற்று, அவசர சிகிச்சை, புற்றுநோய், சத்திரசிகிச்சை தவிர்ந்த ஏனைய வைத்தியர்களே இந்த பகிஷ்கரிப்பை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், வடமாகாணத்தில், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நீண்ட தூரத்திலிருந்து மக்கள் சிகிச்சைக்காக வருகின்றமை வழமை. குறிப்பாக ஆனைவிழந்தான், வன்னேரிக்குளம் ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 45 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்து மக்கள் சிகிச்சை பெற வைத்தியசாலைகளுக்கு வருகின்றனர்.

அவ்வாறு வருகை தந்த மக்கள், நேற்றைய தினத்தில், உரிய சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாமையால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

Related Posts