Ad Widget

வடக்கின் நிலைமைகள் குறித்து நோர்வே வெளிவிவகார அமைச்சர் மகிழ்ச்சி!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு நோர்வே தயாராக இருக்கின்றது என்று நேற்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரென்டே தெரிவித்தார்.

இலங்கைக்கு நேற்றைய தினம் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்ட நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரென்டே நேற்றுக்காலை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து இருதரப்பு சந்திப்பை மேற்கொண்டதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நோர்வே வெளிவிவகார அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் மேலும் குறிப்பிடுகையில்-

இலங்கைக்கு 11 வருடங்களின் பின்னர் வெளிவிவகார அமைச்சராக வருகைதர கிடைத்தமையையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இலங்கையில் மிக முக்கியமான மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ள நிலையில் விஜயம் செய்ய கிடைத்தமை மகிழ்ச்சிக்குரியதாகும். குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரத்துக்கு வந்து ஒருவருடம் பூர்த்தியடைந்துள்ளமை தொடர்பில் கொண்டாட்டங்கள் இடம்பெறுகையில் இலங்கைக்கு வரக்கிடைத்தமை மகிழ்ச்சிக்குரியதாகும்.

இலங்கைக்கு சர்வதேச நாடுகள் உதவிகளை வழங்குவதற்கு தயாராக உள்ளன. நோர்வேயிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவானது 1986 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டன. மிகவும் நெருக்கமான உறவு இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படுகின்றது. குறிப்பாக மீன்பிடித்துறை விவசாயத்துறை உள்ளிட்ட விடயங்களில் இலங்கையுடன் இணைந்து செயற்பட எதிர்பார்க்கின்றோம்.

அந்த விடயங்கள் குறித்து இன்றைய (நேற்று) சந்திப்பின்போதும் விரிவாக ஆராயப்பட்டது. இலங்கையின் பல்லின மற்றும் பல் கலாசார தன்மைதான் இந்த நாட்டின் பலத்துக்கு காரணமாக அமைந்துள்ளன. அதனை மேலும் பலப்படுத்தவேண்டும். அந்தவகையில் இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு நோர்வே தயாராக இருக்கின்றது.

விசேடமாக வடக்கில் காணப்படும் நிலைமைகள் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். வீடமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அவை குறித்து மகிழ்ச்சியடைகின்றோம். நோர்வேயை உங்களின் நெருங்கிய மற்றும் உண்மையான நண்பனாக பாருங்கள்.

நாங்கள் உங்களுக்கு உதவிகளை வழங்குவோம். உங்களின் நல்லிணக்க பணிகளுக்கு ஒத்துழைப்பை நல்குவோம். இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியமைக்கு நன்றி தெரிவிக்கின்றோம். இலங்கையுடன் ஒத்துழைப்புடன் செயற்பட அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம்.

மேலும் இலங்கையினால் முன்னேற்றமடைந்து செல்வதற்கு பாரிய ஆற்றல் காணப்படுகின்றது. அந்த ஆற்றலை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். விசேடமாக இலங்கையில் நேரடி முதலீடுகளை முன்னெடுப்பதற்கு தயாராகவுள்ளது. அதன்மூலம் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

Related Posts