ரஜினிகாந்த், எந்திரன் படத்திற்குப் பிறகு இரு வேடங்களில் நடிக்கும் லிங்கா படத்தின் கடைசிக் கட்டப் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. இதற்கு முன் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படத்தை அவருடைய ரசிகர்களே கூட கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
மோஷன் கேப்சரிங் படமாக இந்தியாவில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட படமாக இருந்தாலும் அந்தப் படம் ரஜினி ரசிகர்களை மட்டுமல்லாது மற்ற ரசிகர்களையும் திருப்திப்படுத்தவில்லை.
ரஜினிகாந்த் நடித்த ஒரு முழுமையான படமாக 2010ல் வெளிவந்த எந்திரன் படத்திற்குப் பிறகு கடந்த நான்கு வருடங்களில் தமிழ்த் திரையுலகத்தின் வியாபார வட்டம் பல மடங்கு வளர்ச்சியடைந்துவிட்டது.
அதைக் கருத்தில் கொண்டு லிங்கா படத்தை உலகம் முழுவதிலும் பல நாடுகளில் வெளியிட திட்டமிட்டு வருகிறார்களாம். அதற்கான பேச்சுவார்த்தை இப்போதே ஆரம்பித்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். எப்எம்எஸ் என அழைக்கப்படும் வெளிநாட்டு வியாபாரத் தொடர்புகள் தற்போது தமிழர்கள் வசிக்கும் பல நாடுகளுக்கும் பரவி விட்டது.
தற்போதைய டிஜிட்டல் முறைகளும் அதற்கு பெரும் உதவி செய்து வருகிறது. இதனால், புதிது புதிதாக சில நாடுகளும் தற்போது இந்தப் பட்டியலில் இணைந்துள்ளனவாம்.
தென்னாப்பிரிக்காவில் உள்ள சில நாடுகள், ரஷ்யா மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகள், கொரியா, வியட்நாம் போன்ற நாடுகளில் கூட லிங்கா படத்தைத் திரையிட ஆர்வம் காட்டி வருகிறார்களாம்.
தமிழ் சினிமாவின் வியாபார வளர்ச்சி என்பது ரஜினிகாந்த் நடித்து வெளிவரும் படங்களின் மூலமே அதிகமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதை ஏற்கெனவே எந்திரன் படம் நிரூபித்திருந்தது. தற்போது லிங்கா படம் மூலம் அது மேலும் அதிகமாக நடக்க உள்ளது.