லிங்கா திரைப்படத்துக்குத் தடை?, ரஜினி, ரவிக்குமாருக்கு நோட்டீஸ்!!!

“லிங்கா’ திரைப்படத்துக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்குப் பதில் அளிக்குமாறு நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை செயலர், தமிழக அரசின் செய்தித் துறைச் செயலர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்றுப் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

lingaa-rajini

மதுரை சின்னசொக்கிக்குளத்தைச் சேர்ந்த தொலைக்காட்சித் தொடர் இயக்குநர் கே.ஆர்.ரவிரத்தினம், தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.வேணுகோபால் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

இயக்குநர் ரவிரத்தினம் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

பொன் சோலை பிலிம்ஸ் தயாரிக்கும் ‘முல்லைவனம் 999’ திரைப்படத்தின் இயக்குநராக உள்ளேன். இந்த திரைப்படத்தின் கதையை 2013 பெப்ரவரி 24இல் யூ டியூப் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருந்தேன். ஒரு திரைப்படத்தின் கதை, வேறொருவருடையது எனச் சொந்தம் கொண்டாடக் கூடாது; காப்புரிமை பெறக் கூடாது என்பதற்காக யூ டியூப்பில் பதிவேற்றம் செய்வது வழக்கத்தில் உள்ளது.

அதைத் தொடர்ந்து கடந்த பெப்ரவரி 24இல் சென்னை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் ‘முல்லைவனம் 999’ படத்துக்கு பூஜை போடப்பட்டது. வரும் ஜனவரியில் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டிருந்தேன். மேலும், கடந்த 10 மாதங்களாகப் படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் மதுரை, தேனி மாவட்டங்களிலும், கேரளத்திலும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், யூ டியூப்பில் எனது கதை, லிங்கா என்ற திரைப்படத்தின் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. ராக்லைன் வெங்கடேஷ் என்பவர் இந்த திரைப்படத்தைத் தயாரிக்கிறார் எனவும், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போகிறார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனது கதையைத் திருடி, ‘லிங்கா’ திரைப்படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக டி.ஜி.பி, தென்மண்டல ஐ.ஜி, மதுரை மாநகரக் காவல் ஆணையர், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறைச் செயலர், தமிழக அரசின் செய்தித் துறைச் செயலர் உள்ளிட்டோருக்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

ஆகவே, எனது புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். ‘லிங்கா’ படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும். – என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன்பு விசாரணைக்கு வந்தது. இம்மனுவுக்குப் பதில் அளிக்குமாறு திரைப்பட நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ள மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உட்பட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் விசாரணையை இம்மாதம் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்