ரி.ஐ.டியினரால் கைதான நபரை விடுவிக்க ஐ.நா.சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்!

ஐ.நா. விசாரணைக் குழுவிடம் சாட்சியமளிப்பதற்கான படிவங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள சின்னத்தம்பி கிருஷ்ணராஜாவை (வயது – 57) உடன் விடுதலை செய்யுமாறு கோரியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இவ்விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸில் தலையீடு செய்து சாட்சிகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

suresh

கிளிநொச்சி, சிவபுரம், இராஞ்சி பகுதியைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி கிருஷ்ணராஜா ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவிற்கு சாட்சியமளிக்கும் படிவங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் நேற்று பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

குறித்த கைது தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்,

“கிளிநொச்சி, சிவபுரம், இராஞ்சி பகுதியைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி கிருஷ்ணராஜா யுத்தத்தால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட ஒரு நபராவார். இவருடைய பிள்ளைகளில் பெண் பிள்ளை ஒருவர் இறுதி யுத்தத்தின்போது ஷெல் வீச்சுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார்.

அவ்வாறான நிலையில் அவர் விசாரணைக்குழுவிற்கு முன்னால் சாட்சியமளிக்கும் தகமையைக் கொண்டிருக்கின்றார். அத்தகையை ஒருவரை சாட்சியமளிக்கும் படிவங்களை வைத்திருந்தமைக்காக எவ்வாறு கைதுசெய்யமுடியும்? முன்னதாக அரசு காணாமல்போனோர் தொடர்பாக கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைத்து விசாரணைகளை மேற்கொண்டு வந்தது. தற்போது அந்தக்குழு விரிவுபடுத்தப்பட்டு போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றது. ஆகவே இவ்வாறான குழுக்களை அமைத்து அதற்காக சாட்சியங்களைப் பெற்றுவரும் அரசு சர்வதேச விசாரணைக்குழுவின் முன் சாட்சியமளிப்பதை தடுப்பது ஏன்? இது வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியதொன்றாகும்.

அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறித்த விடயத்தில் தலையீடு செய்து கைதுசெய்யப்பட்ட பொதுமகனை உடன் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் கோருகின்றோம்.

அதேநேரம் குறித்த நபரின் கைது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலிடம் நாம் தகவல் வழங்கியுள்ளோம். அதன் அடிப்படையில் ஐ.நா. மனித உரிமை கவுன்ஸிலும் இவ்விடயத்தில் விரைந்து செயற்பட்டு கைதுசெய்யப்பட்ட நபரை விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். மேலும் சாட்சியங்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்துகின்றோம்” – என்றார் சுரேஷ் எம்.பி.

தொடர்புடைய செய்தி
ஐநா விசாரணை சாட்சியத்துக்கான படிவத்தை வைத்திருந்தவர் கைது