கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடையில் சேவையில் ஈடுபடும் பெருமளவான தனியார் சொகுசு பஸ்கள் நேற்று சேவையில் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்படுகிறது. தனியார் பஸ் சாரதிகள் சிலர் நேற்று அதிகாலை வத்தளைப் பிரதேசத்தில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பரிசோதகர்களினால் தாக்குதல்களுக்கு உள்ளானதாகவும், இதனைக் கண்டித்தே சேவை நிறுத்தத்தில் ஈடுபட்டதாகவும் யாழ். கொழும்பு தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது,
கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களின் சாரதிகள் சிலர் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பரிசோதகர்களினால் நேற்று அதிகாலை தாக்கப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் குறித்து போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவருடன் கலந்துரையாடுவதற்காக நேற்று பிற்பகல் யாழ்.கொழும்பு தனியார் பஸ் உரிமையாளர்கள் பலர் அதன் தலைமையகத்திற்குச் சென்றிருந்த போதிலும் ஆணைக்குழுவின் தலைவர் இவர்களைச் சந்திக்கவில்லை. இதனையடுத்து பஸ் உரிமையாளர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற போதிலும் பொலிஸார் அதற்கு அனுமதிக்கவில்லை.
பஸ் உரிமையாளர்களை அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றியதுடன் எதிர்வரும் திங்கட்கிழமை இவ்விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துமாறு கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
தமது பஸ்கள் சேவையில் ஈடுபடுவதற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். எனக் கோரியே யாழ். – கொழும்பு சேவையில் ஈடுபடும் பெருமளவான பஸ்களை அதன் உரிமையாளர்கள் நேற்று சேவையில் ஈடுபடுத்தவில்லை.
இதனால் யாழ்ப்பாணத்திற்கு செல்வதற்காக காதிதிருந்த பயணிகள் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகினர். பெருமளவான பஸ்கள் சேவையில் ஈடுபடாத போதிலும் குறிப்பிட்டளவு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.