யாழ். அரச அதிபருக்கு சிறீதரன் எம்.பி. அவசர கடிதம்

வேலணை பிரதேச அபிவிருத்தி தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர், சிறீதரன் அவர்கள் யாழ் அரச அதிபர் அவர்களுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

sritharan

அக்கடிதத்தில் …

வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூன்று கிராம அலுவலர் பிரிவுகளை ( ஜே / 7, ஜே / 8, ஜே / 9) உள்ளடக்கிய யாழ்ப்பாண நகருக்கு மிக அண்மையில் உள்ள வரலாற்றுப் பழமை வாய்ந்த மண்டைதீவுக் கிராமத்தில் தற்பொழுது அறுநூற்றுப்பத்து (610) குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து இருபத்து ஒரு (3021) பேர் வசிக்கிறார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து வரும் தொண்ணூறு (90 %) வீதமான ஆசிரியர்களை நம்பி இரண்டு பிரதான பாடசாலைகள் இயங்குகின்றன . நாற்பதிற்கும் (40) மேற்பட்ட மாணவர்கள் தினமும் உயர்கல்விக்காக யாழ். நகரப்பகுதிப் பாடசாலைகளுக்குச் சென்று வருகின்றார்கள். .

மண்டைதீவு – அல்லைப்பிட்டிக்கான வைத்தியசாலை இன்னும் இயங்கவில்லை. சிறு நோய்களுக்குக் கூட யாழ்ப்பாணம் சென்று வரவேண்டிய நிலை காணப்படுகிறது. வீட்டுத் திட்ட வேலைகள் நடைபெறுவதால் பாரவூர்திகள் கூட இப்பாதையால் தான் பொருட்களுடன் வர வேண்டியுள்ளது . மக்களின் பயிர்செய் நிலங்கள் , வளமான செம்பாட்டுத் தோட்டங்கள், மீன்பிடித் துறைமுகம் , தனியார் வீடுகள் என மண்டைதீவுக் கிராமத்தின் நாலில் ஒரு பகுதியினை இன்னமும் அடாத்தாகப் பிடித்து வைத்திருக்கும் இராணுவம், பொலிஸ், கடற்படையினரும் இவ்வீதியினையே பயன்படுத்துகின்றனர் .

1956 ம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கையிலேயே ஒரு சிறு கல் கூடப் போடப்படாத பாதை மண்டைதீவின் பிரதான பாதையாகவே உள்ளது . தீவக மக்கள் மீள்குடியேறி வாழ்வதற்குப் பிரதான தடையாக இருப்பது அப்பகுதிப் பாதைகளின் சீரின்மையே என்பதைத் தாங்கள் அறிவீர்கள் . அல்லைப்பிட்டி மக்களின் பிரதான வசதிகளின் அடிப்படைத் தளமாகவும் மண்டைதீவே அமைந்துள்ளது.

கோடை காலத்தில் கூட அம்மக்கள் பயணம் செய்ய முடியாதவாறுதான் அல்லைப்பிட்டி மண்டைதீவு பாதை உள்ளது . 1990 ம் ஆண்டிலிருந்து ( 23 ) இருபத்து மூன்று வருடங்களாக தீவுப்பகுதி பூரண அரச கட்டுப்பாட்டிலுள்ளது . அரச படைகளுடன் ஆயுதக் குழுக்களும் கோலோச்சிய தீவுப்பகுதிப் பாதைகள் திருத்தப்படாமை வியப்பாக உள்ளது .

தயவுசெய்து இக்கடிதம் தங்கள் கைக்குக் கிடைத்ததும் தாங்கள் நேரடியாக மண்டைதீவு மண்ணுக்குச் சென்று பார்வையிடுமாறு வேண்டுகிறேன் . மழைக்காலம் ஆரம்பித்துள்ளது . பிரதான பாதையில் உள்ள பாலம் ஒன்று முற்றாக உடையும் மிகப் பயங்கர அபாயத்திலுள்ளது . அவசரமாகத் தாங்கள் செயற்பட்டுப் பண்ணைச் சந்தியிலிருந்து மண்டைதீவு செல்லும் பிரதான பாதையினை உடன் திருத்த ஆவன செய்வதுடன் இத்திருத்தத்திலுள்ள இடைஞ்சல்கள் , பிரச்சனைகள் தொடர்பாக எனக்கு எழுத்து மூலமாக அறியத்தருமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி,
சி. சிறீதரன், பாராளுமன்ற உறுப்பினர்,
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்,
கிளிநொச்சி .