யாழில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக பண மோசடி செய்த சுதந்திர கட்சி முக்கியஸ்தர் கைது

யாழ். மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக, இளைஞர் யுவதிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு தலைமறைவாகியிருந்த சுதந்திரக்கட்சி முக்கியஸ்தரை யாழ்.பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.இவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட அலுவலகத்தில் முக்கிய பொறுப்பில் பணியாற்றிய போது, தனது அரச கட்சி என்ற பெயரை பாவித்து இளைஞர் யுவதிகளிடம் மோசடி செய்துள்ளார்.

இலங்கை மின்சார சபை, ஸ்ரீலங்கா ரெலிக்கொம் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் வேலை பெற்றுத்தருவதாக, இவர் இளைஞர் யுவதிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு தலைமறைவாகியுள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, குறித்த நபரைப் பொலிஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில் அரியாலையிலுள்ள இவரது வீட்டில் வைத்தே நேற்று பொலிஸார் இவரை கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.