யாழில் விவசாயக் கூட்டுறவுச் சங்கங்களை மீளச் செயற்படுத்த நடவடிக்கை!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது செயற்பாட்டில் இல்லாத விவசாய கூட்டுறவுச் சங்கங்களை மீளச் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதில், மாவட்ட கமநல சேவைகள் பணிப்பாளர், மாகாண விவசாயப் பணிப்பாளர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள், விதை உற்பத்தித் திணைக்கள அதிகாரிகள், விதை உற்பத்தி நிலைய அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அவர் கூறுகையில், “மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தில் மாவட்ட விவசாயிகள், பண்ணையாளர்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அதேநேரத்தில், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக, மாகாண விவசாயத் திணைக்களம் ஊடாக மற்றும் மிருக வைத்திய திணைக்களத்தின் ஊடாக யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள், சில மானியத் திட்டங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்மபாக விவசாயிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. விவசாய அமைச்சு அதற்குரிய நிதி ஒதுக்கீடுகளை வழங்கி வருகின்றது.

குறிப்பாக கிராமத்திலே 75 வீதமான மக்கள் வசித்து வருகின்ற நிலையில் அவர்களுடைய மனைப் பொருளாதாரத்தை விருத்தி செய்வதற்குரிய அரசாங்கத்தினுடைய கொள்கையின் அடிப்படையில் பல்வேறுபட்ட மானியத் திட்டங்கள் விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், வங்கிகள் ஊடாகவும் பல்வேறுபட்ட இலகு கடன்கள், வட்டி குறைந்த அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இவ்விடயம் தொடர்பாக விவசாயிகளுக்கு விளங்கபடுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் விவசாயிகளுக்கு அதனை தெளிவுபடுத்த வேண்டும்.

இதேவேளை, விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளாகிய கட்டாக்காலி மாடுகள், விவசாய நிலங்கள் நிரப்பப்படுதல், அதேபோல் விவசாய நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்தல், கட்டிடங்கள் அமைத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் இன்று ஆராயப்பட்டது.

அதற்கு விவசாய கமநலசேவைத் திணைக்களமும் பிரதேச செயலாளர்களும் சம்பந்தப்பட்ட தரப்பினரோடு இணைந்து விவசாயிகளின் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது

மேலும், கடந்த போகத்தில் பெரும் போகத்தின் போதும் விவசாயிகள் எதிர்கொண்ட நட்ட விபரங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. அவர்களுக்குரிய தொழில்நுட்ப உதவிகள் மற்றும் கால்நடை உற்பத்தித் திணைக்களத்தின் நடவடிக்கைகள் விவசாயிகளைச் சென்றடைய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

அத்துடன், அரசாங்கத்தினால், விவசாய அமைச்சினால் அமுல்படுத்தப்படுகின்ற பல்வேறுபட்ட செயற்றிட்டங்கள் மூலம் விவசாயிகள் பயன்பெற வேண்டும். அதேநேரத்தில் ஏற்கனவே இயங்கி, தற்போது செயற்பாட்டில் இல்லாத சில விவசாயக் கூட்டுறவுச் சங்கங்களையும் செயற்படுத்தி அந்தச் சங்கங்கள் ஊடாக விவசாயிகளுக்கு நன்மைகளை ஏற்படுத்த வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor