யாழ் – கொழும்பு பயணிகள் சேவையில் ஈடுபடும் அதிசொகுசு பஸ் ஒன்று உரிய அனுமதிப் பத்திரம் இல்லாமை, அனுமதிப் பத்திர உண்மைத் தன்மையில் சந்தேகம் போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நேற்றைய தினம் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த தனியார் நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த பஸ் ஒன்று உரிய வழித்தட அனுமதிப்பத்திரம் இல்லாத காரணத்தினாலும், குறித்த அனுமதிப் பத்திரத்தின் உண்மைத்தன்மையில் சந்தேகமடைந்த பொலிசார் சாரதியையும் கைது செய்து பஸ்சையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.
இன்று குறித்த பஸ் நிறுவனத்திற்கு எதிராக பொலிசார் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளனர்.
நேற்று இரவு 9.30 மணியளவில் குறித்த பஸ் பொலிசாரால் கைப்பற்றப்பட்ட போது, அதில் இருந்த பயணிகள் பெரும் சிரமத்தின் மத்தியில் வேறு பஸ்களிலும் பயணம் செய்தனர். பலர் பயணம் செய்ய முடியாத காரணத்தினால் வீடு திரும்பியமையையும் காணக் கூடியதாக இருந்தது.
யாழ்பாண பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி சந்திரசேகர தலைமையிலான பொலிஸ் குழுவினரே மேற்படி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
யாழ் – கொழும்பு சேவையில் ஈடுபடும் அதிசொகுசு பஸ்கள் பல உரிய வழித்தட அனுமதிப் பத்திரம் இன்றியே சேவையில் ஈடுபட்டு வந்தன.
இதற்கான காரணங்களை பஸ் உரிமையாளர்களிடம் விசாரித்த போது,
மாதாந்தம் மிக அதிகமான ஒரு தொகையினை பஸ் அனுமதிப் பத்திரம் பெறுவதற்கு செலுத்த வேண்டும் என்பதும், கொழும்பில் சென்று பெறுவதற்கான நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதனால் பலர் அனுமதிப் பத்திரம் இல்லாமலேயே சேவையில் ஈடுபட்டு வந்தார்கள்.
இதில் முக்கியமாக யாழ்- கொழும்பு புகையிரத சேவை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இருந்த பஸ் அனுமதிப் பத்திரக் கட்டணமே தற்போதும் நடைமுறையில் உள்ளது. தற்போது கொழும்புக்குப் பயணிக்கும் அரைவாசிப் பயணிகள் புகையிரதத்திலேயே பயணிக்கின்றார்கள்.
இதனால், அதிசொகுசு பஸ்களின் வருமானம் குறைவடைந்துள்ளதோடு பஸ் உரிமையாளர்களால் அனுமதிப் பத்திரத்துக்கு அதிக பணத்தை செலவழிக்க இயலாத ஒரு சூழ்நிலையும் காணப்படுகிறது. இதனால் பல சொகுசு பஸ் முதலாளிகள் கடனாளிகளாக மாறியுள்ளதாகவும் அறிய முடிகிறது.
இதனால், அதி சொகுசு பஸ் வழித்தட அனுமதிக் கட்டணத்தினை அரைவாசியாகக் குறைக்குமாறு பஸ் உரிமையாளர்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வளவு காலமும் பெரும்பாலான பஸ் உரிமையாளர்கள் போக்குவரத்துப் பொலிசாருக்கு பல அனுசரணைகள், வசதிகளை செய்து கொடுத்தே பெரும்பாலும் சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பி வந்தனர்.
தற்பொழுது பொலிசாரின் கிடுக்குப்பிடி அதிகரித்த காரணத்தினால், பஸ் புறப்படும் இடத்தில் இருந்தே பஸ் வழித்தட அனுமதிப்பத்திர பரிசோதனைகள் முடித்த பின்பே பொலிசார் புறப்பட அனுமதிக்கின்றனர்.