யாழில் கைது செய்யப்பட்ட 10 பேரும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பாம்! இன்றும் சிலர் கைது

யாழில் நேற்று கைதுசெய்யப்பட்ட 10 பேரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தொடர்புபட்டவர்கள் என்றும், இவர்கள் 10 பேரும் யாழ். குடாநாட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தொடர்புபட்டு செயற்பட்டதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரசாந்த ஜயக்கொடி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களால் யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று புதன்கிழமை மாலை வரை ஏழு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரி எஸ். கனகராஜ் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை யாழில் கோப்பாய், சாவகச்சேரி, பருத்தித்துறை, வல்வெட்டிதுறை, சுன்னாகம், சங்கானை ஆகிய பிரதேசங்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்களில் பலர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்றும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: Editor