யாழில். காளான் செய்கையில் ஈடுபட பலர் ஆர்வம்

அதிக வருமானத்தை ஈட்டித்தரும் காளான் உற்பத்தியில் ஈடுபட யாழ். மாவட்டத்தில் பலர் ஆர்வம் காட்டிவருவதாக வடமாகாண பிரதி விவசாய பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம், சனிக்கிழமை (15) தெரிவித்தார்.

kalan

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்டத்தில் சிற்பி காளான், பால் காளான் என 2 வகையான காளான்களை உற்பத்தி செய்து வருகின்றோம்.

இதில் சிற்பிக் காளான் சுவை கூடியது. ஒரு கிலோ காளான் 350 ரூபாய் தொடக்கம் 500 ரூபாய் வரை தற்போது விற்பனை செய்யப்படுகின்றது.

தற்போது காளான் கொள்வனவுக்குரிய வாய்ப்புக்கள் அதிகமாக காணப்பட்டாலும் காளானை உற்பத்தி செய்பவர்கள் குறைவாகவே காணப்படுகின்றார்கள்.

காளான் உற்பத்தி தொழில்நுட்பம் மிக இலகுவானதும், அனைத்து தரப்பினரும் குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள், பாடசாலையில் இருந்து இடைவிலகியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறியவர்கள் மேலதிக வருமானத்தை பெறுவதற்கு காளான் உற்பத்தியை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இதை உற்பத்தி செய்வதற்குரிய ஆரம்ப செலவு 2 லட்சம் ரூபாய். கடனாக அந்த ஆரம்ப செலவை பெற்றால் 6 மாதத்திற்குள் முழுத்தொகையையும் செலுத்த முடியும். குறைந்து ஓரு நாளைக்கு 10 கிலோ காளானை விற்பனை செய்யும் ஒருவர் நிகர வருமானமாக 2500 ரூபாய் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கான கொள்வனவு வாய்ப்புகள் யாழ். மாவட்டத்தில் அதிகமாக இருக்கின்றன.

காளான் உற்பத்தி பயிற்சிகள் திருநெல்வேலியில் அமைந்துள்ள வடமாகாண விவசாய திணைக்களத்தில் வழங்கப்படுகின்றன. வெளி மாவட்டங்களில் இருந்து இங்கு வந்து பயிற்சி பெற்று பலர் செல்கின்றார்கள்.

எனவே யாழ். மாவட்டத்தில் உள்ள உற்பத்தியாளர்கள் இதை உற்பத்தி செய்வதற்கு முன்வரவேண்டும் என்றும் அதற்குரிய உதவிகளை நாம் வழங்குவோம் என்று அவர் மேலும் கூறினார்.