யாழில் கலைஞர்கள் இலைமறை காயாக இருக்கின்றனர்

யாழ். மாவட்டத்திலுள்ள பல கலைஞர்கள் இலைமறை காயாய் இருப்பதாக யாழ். மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் ரூபினி வரதலிங்கம், வெள்ளிக்கிழமை (14) தெரிவித்தார்.

rubini -varathalingam

கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ். மாவட்ட செயலகம் இணைந்து நடத்திய மாவட்ட மட்ட கலை இலக்கிய போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே ரூபினி வரதலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

வருடா வருடம் பிரதேச, மாவட்ட மட்டங்களில் கலை நிகழ்ச்சி போட்டிகளை நடத்தி பரிசில்களை வழங்கி வருகின்றோம். இதன் நோக்கம் பிரதேசங்களிலுள்ள கலைஞர்களுக்கு வாய்ப்புக்களை வழங்குவதாகும்.

மேலும், பிரதேச ரீதியில் கலாச்சாரத்தை பேணும் நோக்கில் பல மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சில மையங்கள் உருவாகப்பட்டு வருகின்றன.

இந்த கலாச்சார மையங்கள் இந்து சமயத்தை மட்டுமன்றி, ஆன்மீகம், யோகாசனம் போன்ற ஒழுங்கு பயிற்சிகள் நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட மட்டத்தில் இந்நிகழ்வுகள் ஏற்படுத்தப்படாவிட்டாலும் பிரதேச மட்டத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

யாழ். மாவட்டத்தில் கலாச்சார பேரவை அங்குரார்ப்பணம் மேற்கொள்ள வேண்டும். மேலும் புதிய அங்கத்தவர்களை உருவாக்கி பாரிய திட்டங்களை உருவாக்கி செயற்படுத்த வேண்டும் என்பது மாவட்ட செயலாளருடைய ஆவாவாகவுள்ளது.

அதற்கு கலைஞர்களின் கலையோடு சேர்ந்த ஒத்துழைப்பு அவசியமாகும்.

யாழ். மாவட்டத்திலுள்ள கலைஞர்கள் உரிய முறையில் பேணப்படவேண்டியவர்கள் என ரூபினி வரதலிங்கம் மேலும் கூறினார்.