யாழில் எரிகாயங்களினால் பாதிக்கப்படுவோர் அதிகரிப்பு

fire2யாழ். போதனா வைத்தியசாலையில் எரிகாயங்களுக்கு இலக்காகி சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையின் புள்ளி விபரதகவல்கள் தெரிவிக்கின்றன.

சமையலறையில் கவனயீனத்தால் தீ பற்றிக் கொண்டமை, மன உளைச்சல் காரணமாகவும், குடும்பச் சண்டை காரணமாகவும், மண்ணெண்ணெய் ஊற்றித் தீ மூட்டிக் கொள்ளுதல், போன்ற சம்பவங்களின் மூலமாகவே அதிகமானவர்கள் தீக்காயங்களுக்கு இலக்காகி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்களில் அதிகமானவர்கள் பெண்களாகவே காணப்படுவதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பாரதூரமான எரிகாயங்களுக்கு இலக்காகியவர்கள் சில நாட்களின் பின்னர் உயிரிழந்துவிடும் நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் புள்ளி விபரங்களின் மூலம் உடலில் முக்கிய பாகங்களில் தீக்காயங்கள் ஏற்பட்டவர்களுக்கு உயிராபத்து நிச்சயம் என்றே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக தீச் சம்பவங்களினால் தீக்காயங்களுக்குள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதனை அதன் தரவுகளில் இருந்து அறியமுடிகின்றது.

அத்துடன் கடந்த ஆண்டு மட்டும் 194 பேர் இந்த வைத்தியசாலையில் தீக்காயங்களுக்குள்ளாகி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 30 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் வைத்தியசாலைப் புள்ளிவிபரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.