Ad Widget

முகப்புத்தகத்தில் சர்வதேச வேட்டி தினத்தினைக் கொண்டாடும் ஆண்கள்!!!

இன்று சர்வதேச வேண்டி தினம் கொண்டாடப் படுகிறது. இதையொட்டி ஆண்கள் வேட்டியணிந்த தங்களது புகைப்படங்களை சமூகவலைதளப் பக்கங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

‘ஆள் பாதி ஆடை பாதி’ என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன் என்று கூறப்படுவதுண்டு. ஒருவர் அணிந்துள்ள ஆடையைக் கொண்டே அவரது குணம், ரசனை, பொருளாதார வசதி உள்ளிட்டவற்றை மதிப்பிட்டு விடலாம்.

அந்தவகையில் தமிழர்களின் பாரம்பரிய உடை வேட்டி ஆகும். ஆனால், இன்றைய இளம் தலைமுறையிடையே வேட்டி கட்டும் ஆர்வம் குறைந்து வருகிறது.

எனவே தான் உலக பாரம்பரியங்களை பாதுகாக்கும் யுனெஸ்கோ நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஜனவரி 6-ம் தேதி சர்வதேச வேட்டி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது வேட்டிக்கு கிடைத்த உலக அங்கீகாரம் எனலாம்.

வேட்டி தினத்தைக் கொண்டாடும் வகையில் இன்று இந்தியாவில் பெரும்பாலான ஆண்கள் வேட்டி கட்டியுள்ளனர். வேட்டி கட்டி செல்லும் ஆண்களை சாலையிலும் அதிகளவில் பார்க்கமுடிகிறது.

இதுதவிர, வேட்டி கட்டிய தங்களது புகைப்படங்களையும் பலர் பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட பக்கங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். கூடவே ஆண்களுக்கு வேட்டி தின வாழ்த்துக்களையும் அவர்கள் கூறியுள்ளனர்.

வேட்டி தினத்தையொட்டி தலைமை செயலகத்தில் பணியாற்றும் சுமார் 2500 ஆண்கள் வேட்டி அணிந்து பணிக்கு வந்துள்ளனர். இதேபோல், அரசு மற்றும் தனியார் அலுவலங்களில் பணி புரிவோரும் இன்று வேட்டியுடனேயே பணிக்கு சென்றுள்ளனர்.

தற்போது கடைகளில் சிறுவர்களுக்கும் வேட்டிகள் கிடைப்பதால், பலர் தங்களது ஆண் குழந்தைகளுக்கும் வேட்டி அணிவித்து, அதனைப் புகைப்படமாக எடுத்து சமூகவலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.

அதிலும் சந்தையில் ஒட்டிக் கொள்ளும் வேட்டி, பாக்கெட் வைத்த வேட்டி என ஆண்களின் வசதிக்கேற்ப பல்வேறு அம்சங்களுடன் வேட்டிகள் கிடைக்கின்றன. இதனால் வேட்டிக் கட்டத் தெரியாது என கடந்தாண்டுகளில் மழுப்பி வந்த ஆண்களில் பலர் கூட இந்தாண்டு வேட்டியுடன் வலம் வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் உள்ள ஒரு மனமகிழ் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் வேட்டி கட்டிச் சென்றபோது, அந்த மனமகிழ் மன்ற நிர்வாகம் அவரை அனுமதிக்கவில்லை. இதனைத் தொடர்ந்தே வேட்டி விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்தது.

அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஹோட்டல்கள், மனமகிழ் மன்றங்கள் அனைத்தும் வேட்டி கட்டி வருபவர்களை அனுமதிக்காவிட்டால் அதன் அனுமதி ரத்து செய்யப்படும் என தமிழக அரசு அவரசச் சட்டத்தையும் இயற்றி வேட்டிக்கு பெருமை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts