மதிலை உடைத்து வீட்டினுள் நுழைந்த வான்!, தாயும் மகனும் படுகாயம்

யாழ். மல்லாகம் சந்தியில் நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயொருவரும் அவரின் 4 வயதுடைய மகனும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.யாழிலிருந்து மல்லாகம் நோக்கி சென்ற வான் ஒன்று அங்கு கடமையில் நின்ற பொலிஸாரை கண்டதும் மிக வேகமாக செல்ல முற்பட்டுள்ளது.

இதன் போது வேகமாக வாகனத்தைச் செலுத்திய குறித்த வானின் சாரதி, முன்னால் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தாயையும் மகனையும் மோதிவிட்டு, அருகிலிருந்த மதில் சுவரையும் இடித்து வீட்டினுள் நுழைந்துள்ளது.

இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்த தாயும் மகனும் உடனடியாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வானின் சாரதியைக் கைது செய்துள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.