ஜப்பான் யுவதிக்கு மயக்கமருந்து கொடுத்து இலங்கையர் செய்த காரியம்

சுதந்திர தினத்தை ஒட்டி இந்தியாவுக்கு சென்ற, ஜப்பானியப் பெண்ணுக்கு, இலங்கையர் ஒருவர் மயக்க மருந்தை கொடுத்து, கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.

கடந்த 10ம் திகதி டெல்லிக்கு சென்ற அந்த ஜப்பானியப் பிரஜையிடம், ரயில் நிலையத்துக்கு வௌியே வைத்து, சந்தேகநபர் தன்னை சுற்றுலா வழிகாட்டி (guide) என அடையாளப்படுத்தியுள்ளார்.

பின்னர், தான் ஒரு இலங்கையர் எனவும், அங்கு தேங்காய் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும், அதில் போதிய வருமானம் இல்லாததால் இந்தியாவுக்கு வந்து வழிகாட்டியாக பணி புரிந்து வருவதாகவும், குறித்த யுவதியிடம் சந்தேகநபர் குறிப்பிட்டதாக அந்த நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், முதல் நாளன்று அறிமுகமில்லாத சில இடங்களுக்கு அப் பெண்ணை அழைத்துச் சென்ற அவர், அப் பெண்ணின் நம்பிக்கையைப் பெற்று, மறுநாள் வௌியிடத்திற்கு கூட்டிச் சென்றுள்ளார்.

அங்கு ஒரு உணவு விடுதிக்கு தன்னை அழைத்துச் சென்ற சந்தேகநபர், இருவருக்கும் உணவை தெரிவு செய்ததோடு, சில நிமிடங்கள் எங்கோ சென்றுவிட்டு, பின்னர் ஒரு பழரசக் கோப்பையுடன் வந்ததாக அப் பெண் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து அப் பெண்ணுக்கு அந்த பாணத்தை கொடுத்துள்ளார்.

அதனை அருந்திய தான், மயக்கமுற்றதாகவும் என்ன நடந்தது என தனக்குத் தெரியவில்லை எனவும் அந்த ஜப்பானிய யுவதி கூறியுள்ளார் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, வௌ்ளிக்கிழமை காலை, வௌிநாட்டு பெண் ஒருவர் சரோஜினி நகர் பகுதிக்கு அருகில் மயக்க நிலையில் விழுந்து கிடப்பதாக, கிடைக்கப் பெற்ற தொலைபேசி தகவலுக்கு அமைய, அந்த யுவதி மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சம்பந்தப்பட்ட ஜப்பானிய யுவதி ஆபத்தான நிலையில் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, அவரது பெறுமதி மிக்க கெமரா, கையடக்கத் தொலைபேசி, 15,000 ரூபா பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

Recommended For You

About the Author: Editor