புத்தூரில் பெண்ணின் சடலம் மீட்பு தொடர்பில் காதலனுக்கு விளக்கமறியல்

jail-arrest-crimeபுத்தூர் கிழக்கிலுள்ள கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அப்பெண்ணின் காதலனை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்திய போதே அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பஷீர் மொஹமட் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்.புத்தூர் கிழக்கு மத்திய சனசமூக நிலையத்திற்கு அருகிலுள்ள கிணற்றிலிருந்து கடந்த மாதம் 29 ஆம் திகதி இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.

அதே இடத்தினைச் சேர்ந்த அமிர்தலிங்கம் மைதிலி (வயது – 27) என்பவர் இவ்வாறு கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இது தொடர்பில் அவரது காதலனான அமிர்தலிங்கம் கிருஷ்ணதீபன் (உழவு இயந்திரச் சாரதி) அச்சுவேலி சிறு குற்றத் தடுப்புப் பொலிஸாரால் நேற்று 07 ஆம் திகதி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில்,

நாங்கள் இருவரும் காதலர்கள். சம்பவத்திற்கு முதல் நாளான 28 ஆம் திகதி இரவு தொலைபேசி அழைப்பை எடுத்த நான் அவளை வெளியில் வருமாறு அழைத்தேன்.

அவளும் வந்தாள், இருவரும் சனசமூக நிலையத்திற்கு அருகில் கதைத்துகொண்டிருந்தோம். இந்நிலையில் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு அவள் கேட்டாள். நான் அதற்கு மறுத்துவிட்டேன். அதன்போதே அவள் கிணற்றில் குதித்துவிட்டாள். என்னசெய்வதென்று தெரியாமல் அவளை காப்பாற்றாமல் பயத்தில் அங்கிருந்து ஓடிவிட்டேன் என்றும் வாக்குமூலமளித்துள்ளார்.

பெண்ணின் கையடக்க தொலைபேசிக்கு வந்த அழைப்பை வைத்தே குறித்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.