வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச சபையின் பதிய கட்டித்தின் மீது ஆயுதம் தாங்கிய குழுவினர் துப்பாக்கி முனையில் காவலர்களை கட்டி பற்றையில் போட்டுவிட்டு கட்டிடத்தின் மீது கழிவு ஒயில் ஊற்றியுள்ளார்கள்.
இன்று புதன் கிழமை அதிகாலை 2.00 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.அதிகாலை வேளையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெள்ளைவானில் வந்த பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் மதில் ஏறிப்பாயந்து காவலாளிகளை துப்பாக்கி முனையில் பிடித்து அவர்களை நிர்வாணமாக்கியுள்ளார்கள்.
அதன் பின்னர் அவர்களின் கைகள் கால்களையும் மற்றும் முகத்தையும் அவர்களின் உடைகளினால் கட்டியுள்ளார்கள்.
காவலாளிகளை துப்பாக்கி முனையில் வைத்துக்கொண்டு அவர்களிடம் இருந்த கையடக்கத் தொலைபேசிகள் அடையாள அட்டைகளையும் பறித்தெடுத்துள்ளார்கள். அத்துடன் காவலாளிகள் மீதும் கழிவு ஒயிலினை தலையில் ஊற்றி அசிங்கப்படுத்தியுள்ளார்கள். காலாளிகளை தாக்கியும் விட்டு கட்டடத்தின்மேல் கழிவு ஒயிலை பரவலாக ஊற்றிவிட்டு வந்த வாகனங்களில் தப்பிச்சென்றுள்ளார்கள்.
குறிப்பிட்ட நபர்கள் வெளியேறும் போது காவலாளிகளை கட்டிடத்தின்பின்புறத்தில் உள்ள பற்றைகளுக்குள் கொண்டுபோய் போட்டுவிட்டு சென்றுள்ளார்கள்.காவலாளி ஒருவர் தனது கட்டுக்களை அகற்றி தப்பிய நிலையில் மற்றைய காவலாளியையும் அவிழ்த்துவிட்டு இருவரும் அயலவர் ஒருவரின் வீட்டிற்க்குச் சென்று அவர்களின் தொலைபேசி உதவியைப் பெற்று பிரதேச சபைத் தலைவர் வீட்டிற்கு அறிவித்துள்ளார்கள்.
குறிப்பிட்ட இடத்திற்க்கு உடனடியாக வந்த தலைவர் தி.பிரகாஷ் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் உடன் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். சுன்னாகம் பொலிசார் காவலாளிகளை அழைத்து முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்கள்.
அதேவேளை, குறிப்பிட்ட கட்டடத்தை வட மாகாண ஆணையாளரின் பணிப்புரைக்க அமைவாக கடந்த புதன் கிழமை கையேற்பதற்கு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் வருகை தந்த போதிலும் தவிசாளர் தாம் உடன் படிக்கை செய்ததன் பெயரில் தம்மிடம் கட்டடடம் கையளிக்க வேண்டும் என வலியறுத்தியமைக்க அமைவாக ஒப்பந்தகாரர் கட்டடடத்தை தவிசாளரிடம் கையளித்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே தவிசாளருக்கும் உள்ளுராட்சி உதவி ஆணையாளரருக்கும் முரண்பாடு ஏற்பட்ட வேளையில், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் தமக்கு ”ஆளுனர் படைகளின் பாதுகாப்பு வழங்கியுள்ளார்” எனக்கூறி தவிசாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.இந்த நிலையில், இன்று பகல் புதிய கட்டிடத்திற்கு பால் காய்ச்சி குடிபுக இருந்த நிலையில் தற்போது கட்டித்தின் மீது கழிவு ஒயில் ஊற்றப்பட்டு அசிங்கப்படுத்தப்பட்ட சம்பவம் பலரிடையேயும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையினர் பாதுகாப்புப்படையினர் யாழ்ப்பாணத்தில் இருக்கும் நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- Sunday
- October 13th, 2024