புண்ணிய பூமியில் படகுத் துறையா? எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்!!

சைவசமய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) மாலை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாகவும், யாழ்ப்பாணத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாகவும் திகழும் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு அண்மையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்டுள்ள பகுதியில், மீன்பிடி இறங்குதுறைக்கான ஆரம்ப கட்டப் பணிகள் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ´புண்ணிய பூமியில் படகுத் துறையா? ஒரு போதும் வேண்டவே வேண்டாம்!, ´சைவசமயத்தை மாசுபடுத்த ஒரு போதும் அனுமதியோம்´, ´கடற்படையே மக்களின் கருத்தை மதி!´, இந்து மதத்தின் புனிதத்தைக் கெடுக்காதே´, மாண்பு மிகு ஜனாதிபதி அவர்களே! கெளரவ அமைச்சர் அவர்களே! புண்ணிய பூமியில் படகுத் துறையா? அனுமதிக்க வேண்டாம்´, ´ஐந்தாங் குளம், வலுத் தூண்டல் மக்களின் வாழ்வாதாரத்தினை மழுங்கடிக்காதே! ´ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் இவர்கள் தாங்கியிருந்தனர்.

இந்தப் போராட்டத்தில் கீரிமலை நகுலேஸ்வர ஆலய ஆதீனஹர்த்தா சிவஸ்ரீ- நகுலேஸ்வரக் குருக்கள் குமாரசாமிக் குருக்கள், கீரிமலை முத்துமாரியம்மன் ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ ந.விக்கினேஸ்வரன், சிவபூமி அறக் கட்டளையின் தலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்கா தேவி ஆலயத் தலைவருமான கலாநிதி ஆறு.திருமுருகன், சைவமகாசபையின் செயலாளர் ப. நந்தகுமார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட சைவசமய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கருத்துத் தெரிவிக்கையில்,

மாவிட்டபுரம் முதல் கீரிமலை வரை பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாகத் திகழும் கிரிமலை நகுலேஸ்வரர் ஆலயம், மாவிட்ட புரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை முத்துமாரியம்மன் ஆலயம், ஸ்ரீ நாராயண சுவாமிகள் ஆலயம், உச்சிப் பிள்ளையார் ஆலயம், தண்டாயுதபாணி முருகன் ஆலயம் போன்ற பல்வேறு பிரசித்தி பெற்ற ஆலயங்கள்.

மற்றும் சடையம்மா சமாதி கோவில், குழந்தைவேல் சுவாமிகள் சமாதி, அருளம்பல சுவாமிகள் சமாதி, ஸ்ரீ ரேணுகா ஆச்சிரமம், சிவபூமி ஞான ஆச்சிரமம் போன்ற புனித சமாதிகளும், ஆச்சிரமங்களும், கீரிமலை தீர்த்தம், கண்டகி தீர்த்தம் போன்ற புனித தீர்த்தங்களும் உள்ளன.

இவ்வாறு பல சிறப்புக்கள் பொருந்திய சைவசமயப் புனிதத் தலங்களும், மகிமை வாய்ந்த இடங்களும் காணப்படும் பிரதேசத்தில் மீன்பிடி இறங்கு துறை நிர்மாணிக்கப்படுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

பிரசித்தி பெற்ற கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்குச் சுமார் 200 மீற்றர் தூரத்தில் இந்த மீன் பிடி இறங்கு துறை அமைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த இறங்கு துறை அமைவதால் இந்தப் பிரதேசத்தின் புனிதம் கெடும் சூழல் உருவாகும் எனவும் கவலை வெளியிட்டனர்.

மேலும் மயிலிட்டியில் மீன்பிடித் துறைமுகம் உள்ள நிலையில் அந்தப் பிரதேசத்தை விடுவிக்காமல் கீரிமலையில் மீன்பிடித் துறைமுகத்தை அமைப்பது ஏன்? எனவும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இதேவேளை, போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீன்பிடி இறங்கு துறை நிர்மாணிக்கப்பட்டு வரும் பகுதி வரை ஆர்ப்பாட்டப் பேரணியாகச் செல்லவிருந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த காங்கேசன்துறைப் பொலிஸார் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன், குறித்த விடயத்தை மேலதிகாரிகள் மற்றும் உரிய தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டு சென்று உரிய தீர்வு பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தனர்.

எனவே ஆர்ப்பாட்டப் பேரணி கைவிடப்பட்டது.

keeri-malai-3

keeri-malai-2

keeri-malai-1

Related Posts