பதின்ம வயதுக் கர்ப்பத்தைத் தவிர்க்கும் ஆலோசனைகளைப் பெற பின்னடிப்பு!

தேவையற்ற பதின்ம வயதுக் கர்ப்பங்களை இளம் சமூகத்தினர் தவிர்ப்பதற்கான நிபுணத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கு வெட்கம், பயம் மற்றும் சட்டக் கட்டுப்பாடுகள் பிரதான காரணமாக இருக்கின்றன என்று நாட்டின் ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

NHDR 2014

அண்மையில் வெளியிடப்பட்ட தேசிய மனித அபிவிருத்தி அறிக்கையில் இவ்விடயம் தெரிய வந்துள்ளது.

சுமார் 55 வீதமான இளைஞர், யுவதிகளுக்கு தங்கள் பிரதேசத்தில் இது தொடர்பாக உள்ள பாலியல் மற்றும் இனப்பெருக்கச் சுகாதார சேவைகள் பற்றிய தகவலே தெரிந்திருக்கவில்லை.

இந்த விடயங்களில் சமூக, கலாசார மற்றும் மத பண்பியல்புகளே அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றன என்கின்றது அந்த ஆய்வு அறிக்கை.

இளைஞர், யுவதிகள் அவ்வப்போது தங்கள் பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களிடமிருந்து இவ்விடயத்தில் தகவல்களைப் பெற்றுக்கொள்கின்றனர். ஆனாலும் அந்தத் தகவல்கள் கூட தவறாக வழிப்படுத்துவனவாக அமந்துவிடுவதுண்டு என்றும் ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகின்றது.

இளைஞர், யுவதிகளில் 35 வீதத்தினர் வெட்கம் காரணமாகவும், 30 வீதத்தினர் சட்டக் கட்டுபாடுகள் கருதியும், 22 வீதத்தினர் பயத்தினாலும் இத்தகைய ஆலோசனைச் சேவைகளைப் பெற்றுக் கொள்வதில்லை என்றும் அந்த அறிக்கையின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

குடும்ப சுகாதாரப் பிரிவின் புள்ளிவிபரங்களின்படி கடந்த வருடம் ஏற்பட்ட கர்ப்பங்களில் 5.3 வீதமும் அதற்கு முந்திய வருடம் (2012 இல்) 6 வீதமும் பதின்ம வயதுக் கர்ப்பங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.