பகிரங்க விவாதத்திற்கு வருமாறு சிவஞானத்திற்கு அழைப்பு

தன்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு வடமாகாண சபையின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்திற்கு, சி.தவராசா அழைப்பு விடுத்துள்ளார்.

thavarasa

வடமாகாண சபை நிதி தொடர்பாக அறிவிலித்தனமான விமர்சனங்களை அரசாங்கம் மற்றும் மாகாண சபை எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருவதாக, அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் பத்திரிகையாளர் சந்திப்பின் போது கூறினார்.

இதற்கு பதிலளித்துள்ள வட மாகாண சபை எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

வட மாகாண சபை பதவியேற்று ஒரு வருட காலம் முடிவுற்ற நிலையில், இதுவரை மாகாண சபை மக்களுக்கு என்னத்தை செய்துள்ளது என்பது தொடர்பாக மாகாண சபையின் முதலமைச்சரோ, அமைச்சர்களோ அல்லது அவைத் தலைவரோ தொலைக்காட்சியின் முன்பு அல்லது மக்கள் அரங்கொன்றில் நேரடி விவாதத்துக்கு வருமாறு எதிர்க் கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பத்திரிகையாளர்களை அழைத்து ஒரு பக்கசார்பாக பிழையான கருத்துக்களை வெளியிடாமல், நேரடியாக மக்கள் மன்றின் முன் இது தொடர்பான விவாதத்திற்கு வருமாறு வடமாகாண முதலமைச்சரையும், அமைச்சர்களையும், அவைத் தலைவரையும் அழைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் வட மாகாண சபையின் நிர்வாகத்திற்கு பொறுப்பானவர்கள் முதலமைச்சரும், அமைச்சர்களுமே. அவர்களே நிதிச் செலவீனம் தொடர்பான விடயங்களுக்கு பதில் அளிக்க வேண்டும்.

அவைத் தலைவர் சபை நடவடிக்கைகளுக்கே பொறுப்பானவர். இருந்தும் இவர்களில் ஒருவரை நேரடி விவாதத்திற்கு தான் மீண்டும் அழைப்பதாக அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.