தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியா பிரஜைகள் குழுவினரால், நாளை(10) நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு எமது கட்சியின் சார்பாக முழுமையான ஆதரவைத் தெரிவிக்கிறோம் என முற்போக்கு தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.விஜயகாந், இன்று (09) தெரிவித்துள்ளார்.
அவர் வெளிட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இப் போராட்டத்தின் ஏற்பாட்டாளர் தாக்கப்பட்டமை ஒரு ஜனநாயக உரிமை மீறலாகும். ஜனநாயக நாட்டில் கருத்துக்களை கருத்துக்களால் தான் கையாள வேண்டுமே தவிர இவ்வாறான தாக்குதல்களாலும் அச்சுறுத்தல்களாலும் எவற்றையும் சாதித்துவிட முடியாது என்பதுடன் இத்தாக்குதலை நாம் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்.
கடந்த 08ஆம் மாதம் 20ஆம் திகதி எமது கட்சியால் யாழ். மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தி யாழ். அரச அதிபர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்தோம்.
ஆனால், இது தொடர்பாக பதிலேதும் கிடைக்கப்பெறாத நிலையில் தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலை தொடர்பான இரண்டாம் கட்ட போராட்டமாக கடந்த மாதம் 03,04,05ஆம் திகதிகளில் பெரும் எதிர்ப்புகளுக்கும் மத்தியிலும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை நடாத்தி இருந்தோம்.
மேலும் இவர்களது விடுதலைக்கான எமது போராட்டங்கள் தொடரும் என்பதை தெரிவிப்பதோடு அனைத்து தமிழ் மக்களும், தமிழ் அரசியல் கட்சிகளும், அரச சார்பற்ற அமைப்புகளும் தொடர்ச்சியாக இவ்வாறான போராட்டங்களை முன்னெடுக்கும் போதே எமது சகோதர சகோதரிகளின் விடுதலை சாத்தியம் பெறும் என்பதனை தெரிவிக்கிறோம்.
அத்துடன் நாளை 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலை தொடர்பான போராட்டத்துக்கு எமது பூரணமான ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதோடு எமது கட்சி சார்பாக வவுனியா மாவட்ட அமைப்பாளரும், உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி