நல்லூரில் நேற்று இரவு வாள் முனையில் திருட்டு

கச்சேரி நல்லூர் வீதியில் நாலாம் சந்திக்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் 3 லட்சம் ரூபா பணம் மற்றும் 10 பவுண் தங்க நகைகள் என்பன திருடப்பட்டுள்ளன. இச்சம்பவம் தெடர்பாக மேலும் தெரியவருவதாவது

நேற்று இரவு 8 மணியளவில் வீட்டில் உள்ளவர்களை வாள்கள், கத்திகள் சகிதம் உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த 4 பெண்கள், கைக்குழந்தை மற்றும் வயதானவர் உட்பட ஐவரை  கத்திமுனையில் மிரட்டி வீட்டின் ஒரு பகுதியில் உட்கார வைத்து அவர்களின் வீட்டில் இருந்த தொலைபேசியைத் துண்டித்து மின்விளக்குகளையும் அணைத்துவிட்டு அவர்களின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலிகளை அறுத்து எடுத்ததோடு அவர்களில் காதுகளில் இருந்த தோடுகள் மற்றும் மோதிரங்கள் என்பவற்றை மிரட்டி பறிமுதல் செய்துள்ளனர். அத்தோடு நேற்று வங்கியில் எடுக்கப்பட்ட பணம் மற்றும் வீட்டில் இருந்த பணம் சேர்த்து மொத்தம் 3 லட்சம் ரூபா  பணம் மற்றும் 3 கைத்தொலைபேசிகள், கமரா மற்றும் பல பெறுமதியான பொருள்களையும் திருடிச் சென்றுள்ளனர்.

வந்தவர்கள் நகைகளைப் பறித்து எடுத்துடன் வங்கியில் எடுத்த பணம் எங்கே இருக்கிறது என்று கேட்டும் மிரட்டியுள்ளனர். இவர்கள் மது போதையில் வந்தாகவும் கொச்சைச் சிங்களத்தில் கதைத்தாகவும்  அவர்கள் தெரிவித்தனர். ஓட்டோவில் வந்த இவர்கள் மூவர் வீட்டின் உள்ளே நுழைய மற்றவர்கள் வெளியில் காத்து நின்றதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை –

திருட்டுப்போன வீட்டிற்கு முன்பாக உள்ள ஆள்கள் இல்லாத விருந்தினர் விடுதியையும் உடைத்து விட்டுச் சென்றுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த படையினரும் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டனர். இத்திருட்டுச் சம்பம் தொடர்பாக யாழ்.பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.