இலங்கையில் நல்லிணக்கம், நீதி, சமாதானம் மற்றும் உண்மை அறிதல் ஆகியவற்றை கொண்டு வருவதற்கு தென் ஆபிரிக்காவின் உதவியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடியுள்ளது.
தற்போது இலங்கைக்கு வந்துள்ள தென்ஆபிரிக்காவின் பிரதி அமைச்சர் இப்றாகிம் இப்றாகிமை இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தூதுக்குழுவினர் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது தென் ஆபிரிக்க குழு, தமது அனுபவத்தின் அடிப்படையில் இலங்கையில் நல்லிணக்கத்தை கொண்டுவர இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கும் உதவ முன்வந்தது.
தென் ஆபிரிக்காவின் வகிபாகம் எதுவாக இருக்கும் என எதுவும் கூறப்பட்டவில்லை. ஆனால், அது பயனுடையதாக இருக்கும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நம்புகின்றது என இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
தற்போதைய அரசியல் நிலைமை பற்றி குறிப்பாக 13ஆவது திருத்தத்தை பலவீனப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள் பற்றி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தென் ஆபிரிக்க குழுவிற்கு விளக்கியுள்ளது.
இந்த தூதுக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், பொன். செல்வராசா, ஏ.விநாயகமூர்த்தி மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.