தென்மராட்சியில் அதிக நீரிழிவு நோயாளர்கள்

யாழ். மாவட்டத்தில் தென்மராட்சியிலேயே அதிக நீரிழிவு நோயாளர்கள் உள்ளனர் என சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் த.குகதாசன், வெள்ளிக்கிழமை (14) தெரிவித்துள்ளார்.

உலக நீரிழிவுதினத்தினை முன்னிட்டு யாழ். மாவட்ட லயன்ஸ் கழகமும் சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கமும் இணைந்து நடத்திய விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் ‘இனிப்பு நோயின் கசப்பு முகங்கள்’ எனும் கருப்பொருளிலான கருத்தமர்வும் சாவகச்சேரி நகராட்சிமன்ற பொன்விழா மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்றது.

இந் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்டத்தில் 80,000 நீரிழிவு நோயாளர்கள் உள்ளனர். இதில் 8000 நீரிழிவு நோயாளர்கள் தென்மராட்சியை சேர்ந்தவர்கள். தென்மராட்சியில் 2012 ஆம் ஆண்டு 546 நீரிழிவு நோயாளர்களும் 2013 ஆம் ஆண்டு 574 நீரிழிவு நோயாளர்களும், 2014 ஆம் ஆண்டு இம்மாதம் வரையில் 552 நீரிழிவு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

2013 ஆம் ஆண்டு நீரிழிவு நோயால் 8 பேர் தென்மராட்சியில் உயிரிழந்ததுடன் 4 பேருக்கு கால்கள் அகற்றப்பட்டுள்ளன.

எனினும் இந்நோய் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு அற்ற நிலை காணப்படுகின்றது.

எனவே மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், நீரிழிவு நோயாளர்களை இனங்கண்டு கொள்வதற்காகவும் படிப்படியாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை எல்லைக்குட்பட்ட ஒவ்வொரு கிராமங்களிலும் நடமாடும் பரிசோதனை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றோம்.

இப்பரிசோதனையின் பின்னர் கடந்த 10 மாதங்களில் தென்மராட்சியில் நீரிழிவு நோயால் எவரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்நோய்க்கான மருந்தை வைத்திய ஆலோசனை பெற்றே உட்கொள்ள வேண்டும். என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இலவச இரத்தப்பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக துணை வேந்தர் வசந்தி அரசரட்ணம் உட்பட வைத்திய அதிகாரிகள் லயன்ஸ் கழக பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.