தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்- யாழ்.பல்கலைக்கழகத்திலும் அஞ்சலி!!

தியாக தீபம் திலீபனுக்கான நினைவேந்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினாலும் அனுஷ்டிக்கப்பட்டது.

பிரத்தியேகமான இடமொன்றில் தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலிக்கப்பட்டது.

1987 செப்டெம்பர் 15 ஆம் திகதி, ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அவர் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

எனினும், அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26 ஆம் திகதி முற்பகல் 10.48க்கு அவர் உயிர்நீத்தார்.

இவ்வாறு அவர் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டு மறைந்த காலப்பகுதி வருடாந்தம் அவருக்கான நினைவேந்தல் வாரமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு நீதிமன்றங்கள் தடைவிதித்துள்ள நிலையில், தடைகளையும் தாண்டி திலீபனுக்கு, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் வீரச்சாவடைந்த நேரமான 10.48 மணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஈகச்சுடரினையும் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், தனது குடும்பத்தினருடன் சுகாதார நடைமுறைக்கு அமைய, ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமும் தியாக தீபம் திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

வல்வெட்டித்துத்துறையிலுள்ள அவரது அலுவலகத்தில், திலீபனின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 க்கு சுடரேற்றி, மலர் தூபி எம்.கே.சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதேவேளை அவரது அலுவலகத்திற்கு முன்பாக பெருமளவான பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் சூழ்ந்திருந்த நிலையில், அலுவலகத்தினுள் சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வடக்கில் பெரும்பாலான பகுதிகளில் திலீபனின் நினைவேந்தனை முன்னிட்டு ஒன்றுக் கூடுவதனை தடுக்கும் நோக்கில் இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.