Ad Widget

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்களிடமிருந்து பிரிக்க அரசாங்கம் முயல்கிறது! – எம்.ஏ.சுமந்திரன்

“தமிழ் மக்களிடம் கூறவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வாக்குறுதிகளை வழங்கும் அரசு, அவற்றை நிறைவேற்றாமல் ஏமாற்றி எமது மக்களிடமிருந்து எம்மைப் பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றது. இதில் ஐக்கிய தேசியக் கட்சி கைதேர்ந்தது” என்று சபையில் கடும் அதிருப்தியுடனும், ஆவேசத்துடனும் அரசின் மீது குற்றஞ்சாட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இது கடந்த அரசைவிட மோசமான நிலை என்றும் சுட்டிக்காட்டினார்.

நாம் எமது பொறுமையைக் கடந்துவிட்டோம். இருப்பினும், அதை இன்னும் நீடிக்க விரும்புகின்றோம். இந்தப் பொன்னான வாய்ப்பை அரசு கைநழுவக்கூடாது என்றும் அரசுக்கு இடித்துரைத்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்ட விவரங்களைக் குறிப்பிட்ட அவர், மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து குறிப்பிடவேண்டும். நீதி அமைச்சருடன் நானும், எமது கட்சித் தலைவரும் நடத்திய கலந்துரையாடலில் எமக்கு வாக்குறுதி வழங்கப்பட்டது. நீதி அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதி ஆகியோருக்கிடையில் தொலைபேசியூடாக கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதற்கமைய ஒக்டோபர் 31ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நவம்பர் 7ஆம் திகதிக்குள் அரசியல் கைதிகளின் விடுதலை நிறைவுபெறும் என ஜனாதிபதியால் கூறப்பட்டது. ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியால், அதை நாம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட அரசியல் கைதிகளிடம் சென்று தெரிவித்தோம். அதன் பின்னர் அவர்கள் தமது உண்ணாவிரதத்தைக் கைவிட்டனர்.

இருப்பினும், ஒக்டோபர் 31ஆம் திகதி எவரும் விடுதலைசெய்யப்படவில்லை. இதையடுத்து, நவம்பர் 5இல் பிரதமர் தலைமையில் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இந்த வாரத்துக்குள் இறுதிக் கைதிகள் விடுவிக்கப்படுவதாக இதன்போது இணக்கம் காணப்பட்டது. இவ்வாறாக இந்தச் சபையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதி மீறப்பட்டது. காரணம் என்ன?

99 கைதிகள் புனர்வாழ்வுக்கு இணக்கம் தெரிவித்தனர். அவர்கள் முழு மனதுடன் இந்தப் புனர்வாழ்வுக்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. இப்படியாவது விடுதலை கிடைக்கும் என்ற ஏக்கத்தில்தான் அவர்கள் இணங்கினர்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் பொலிஸார் பிடிக்கின்றனர்; அடிக்கின்றனர்; ஒப்புதல் வாக்குமூலம் பெறுகின்றனர்; நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கின்றனர்.

கடந்த புதன்கிழமை 20 பேர் விடுதலைசெய்யப்பட்டிருக்கவேண்டும். இவர்கள் புனர்வாழ்வுக்கு கோரிக்கை விடுத்தவர்கள். ஆனால், 10 நாட்களின் பின்னர் இந்த 20 பேரில் ஒருவர் மட்டுமே புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளார். 10 நாட்களின் பின்னர்தான் இது நடந்தது. அதாவது, புனர்வாழ்வுக்கான உங்களது முதல் குழுவில் ஒருவர்தான் விடுதலைசெய்யப்பட்டுள்ளார். ஒரு குழுவில் ஒருவர். இதனை எவ்வாறு ஏற்றுக்கொள்வது?

இந்த நிலைமையில்தான் 18 வயது மாணவன் செந்தூரன் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி தற்கொலை செய்துகொண்டார். இவர்களை விடுதலைசெய்யவேண்டும் என்று கடந்த 6 ஆண்டுகளில் எவரும் கேட்கவில்லை. கடந்த அரசின்மீது நம்பிக்கை இல்லை. அதனால் கேட்கவில்லை. ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்யவில்லை. அப்படிச் செய்திருந்தாலும் எதுவும் நடக்காது என்று தெரியும். ஆனால், இந்த அரசு மீது நம்பிக்கை உள்ளது. அதனால்தான் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றது. இருப்பினும், அரசு வழங்கிய வாக்குறுதி மீறப்பட்டது.

இவ்வாறான நிலையிலேயே வரவு – செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக நாம் வாக்களித்தோம். இந்த அரசு வாக்குறுதிகளை வழங்குகிறது. ஆனால், அவற்றை நிறைவேற்றவில்லை. இப்படியிருக்கையில், ஏன் வரவு – செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தீர்கள் என்று மக்கள் கேட்கின்றனர்; விமர்சிக்கின்றனர். அரசியல் இடரை நாம் எதிர்நோக்குகின்றோம்.

எமது மக்களின் இடரை நாம் தீர்க்கவேண்டும். இந்த அரசின் செயற்பாடுகளைப் பார்க்கும்போது எமது பொறுமையை நாம் தாண்டிவிட்டோமோ என்று சந்தேகம் ஏற்படுகின்றது.

ஒரு குழுவில் ஒரே ஒருவர் மட்டுமே புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளர். இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இருப்பினும், நாம் எமது பொறுமையை இன்னும் நீடிக்க விரும்புகின்றோம். இது ஒரு பொன்னான வாய்ப்பு. இது கைநழுவிச் செல்ல அரசு விடக்கூடாது.

கடந்த அரசு இதுபோன்ற வாக்குறுதிகளை வழங்கவில்லை. ஆனால், நீங்கள் வாக்குறுதி தருகின்றீர்கள். அவை பொய்யான வாக்குறுதிகள். நீங்கள் எங்களை ஏமாற்றுகிறீர்கள். இது அதைவிட மோசமான விடயம். இதுதான் உங்களின் உண்மையான நிலையா? இது மக்களின் பிரதிநிதிகளை மக்களிடமிருந்து வேறாக்க செய்யும் முயற்சியாகும்.

நீங்கள் எங்களிடம் வாக்குறுதிகளை வழங்குகிறீர்கள். அந்த வாக்குறுதிகளை எமது மக்களிடம் போய் நாம் சொல்லவேண்டும் என்று நினைக்கின்றீர்கள். ஆனால், அதை நிறைவேற்றுவதில்லை. எங்களை ஏமாற்றுகிறீர்கள். இது எமது மக்களிடமிருந்து எம்மைப் பிரிக்க மேற்கொள்ளும் முயற்சியாகும். ஐக்கிய தேசியக் கட்சி இதில் கைதேர்ந்தது என்பது எமக்குத் தெரியும்” – என்றார்.

இதேவேளை, இராணுவம் குறித்து கருத்து வெளியிட்ட அவர்,

“யுத்தத்தின் பின்னரும் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். இவர்கள் 35, 40 வயதை அடையும்போது ஏதாவது ஒரு நல்ல தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்து இராணுவ சூழ்நிலையிலிருந்து அவர்களை விடுவித்து குடியியல் வாழ்வுடன் இணைக்கலாம். அது அவர்களுக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் நன்மையாக அமையும். இதற்காக அரசிடம் ஏதாவது திட்டம் உள்ளதா?” – என்றார்.

மேலும் வடக்கு, கிழக்கில் நீதிமன்றங்களில் தமிழ் நீதிபதிகள் நியமிக்கப்படவேண்டும் என்றும், உயர்நீதிமன்றத்திலும் தமிழ் நீதிபதிகள் நியமிக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Related Posts