தனுஷின், ‘காக்கா முட்டை’யில் சிம்பு!

வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மணிகண்டன் இயக்கி இருக்கும் படம் காக்க முட்டை. அடுத்த மாதம் வெளிவருகிறது. அதற்குள் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை அள்ளிக் கொண்டிருக்கிறது. சென்னை பகுதியில் உள்ள சேரி சிறுவர்களின் வாழ்க்கைதான் கதை. அவர்கள் சேரியில் வாழ்ந்தாலும் அந்த சூழ்நிலைக்குள்ளும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பது கதையின் கரு.

dhanush-simbu

நான்கு சேரி சிறுவர்கள் நெருக்கமான நண்பர்கள். அவர்களின் சேரிக்கு அருகில் ஒரு பீட்சா கடை வருகிறது. அந்த கடைக்கு சென்று ஒரு பீட்சாவை வாங்கி ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்பதுதான் அவர்கள் ஆசை. அதற்காக அவர்கள் என்ன செய்தார்கள். அவர்கள் ஆசை நிறைவேறியதா என்பதுதான் கதை.

இந்த படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். அதாவது நடிகர் சிம்புவாகவே வருகிறார். சிறுவர்கள் நான்கு பேரும் சிம்புவின் பரம ரசிகர்கள். அவர்களுக்கு சிம்புவை நேரில் சந்தித்து கைகுலுக்க வேண்டும் என்பது லட்சியம். அது எப்படி நிறைவேறுகிறது என்பது படத்தில் வரும் காட்சி.

படத்தை தனுஷ் தயாரிப்பதால், சிம்பு என்பதை தனுஷ் என்று மாற்றி விடலாமா என்று இயக்குனர் மணிகண்டன் யோசித்திருக்கிறார். ஆனால் அதைக் கேள்விப்பட்ட தனுஷ். நீங்கள் நினைத்தபடியே இருக்கட்டும் என்று சொல்லி, அவரே சிம்புவிடம் பேசி நடிக்க வைத்திருக்கிறார். சிம்பு தொடர்பான காட்சிகளை அரை நாளில் எடுத்து முடித்து விட்டார் மணிகண்டன்.