தனியார் காணிகள், வீடுகளிலிருந்தும் இராணுவத்தினர் வெளியேறுவர்: கட்டளைத் தளபதி

Mahintha-hathturusinga-armyதனியார் காணிகள் மற்றும் வீடுகளிலிருந்தும் இராணுவத்தினர் விரைவில் வெளியேறுவார்கள் என்று யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினப் பயன்பாட்டில் இருந்த வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார். இந்த வைபவம் யாழ். அரியாலையில் நடைபெற்றது.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பல வருடங்களிற்கப் பின்னர் இந்த வீடுகளை பொது மக்களிடம் கையளிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம். இது அரசியல் நோக்கத்திற்காக நாங்கள் மேற்கொள்ளவில்லை.

யுத்தத்திற்குப் பிந்திய காலத்தில் யாழ். நகரில் முக்கிய இடங்களில் இருந்த இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறி அந்த இடங்களை பொது மக்களிடம் வழங்கியிருக்கின்றோம்.

மிகவிரைவில் தனியார் காணியில் உள்ள 52 படையணி, மற்றும் 513, 515 ஆகிய படைப்பிரிவுகள் உள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டு உயர்பாதுகாப்பு வலயப்பகுதிக்கும் அரச காணிகளுக்கும் மாற்றம் செய்யப்படவுள்ளது.

அத்துடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனியார் காணிகளில் இருந்து வெளியேறவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றார். இதனால் அவரின் வேண்டுகோளுக்கிணங்க காணிகளை விடுவித்து வருகின்றோம். இருந்தாலும் பலாலியை விடச் சொல்லிக் கோரவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

2008ஆம் ஆண்டுக்கு முன்னர் யாழில் 43 ஆயிரம் படையினர் இங்கிருந்தனர். முப்பதாயிரம் இராணுவத்தினர் குறைக்கப்பட்டு தற்போது 13 ஆயிரம் படையினர் நிலைகொண்டுள்ளனர் என்றார்.

அத்துடன் சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்ற பேதங்களை விடுத்து நாம் அனைவரும் இலங்கையர் என்ற எண்ணத்தில் செயற்படவேண்டும் என்றும் அவர் கோரினார்.

தொடர்புடைய செய்தி
அரியாலையில் இராணுவத்தின் பயன்பாட்டிலிருந்த வீடுகள் விடுவிப்பு

Recommended For You

About the Author: Editor