Ad Widget

ஜனாதிபதியின் நெறிப்படுத்தலில் காணிகள் அபகரிக்கப்படுகின்றன- விந்தன்

முப்படைகளின் தளபதியாக விளங்கும் ஜனாதிபதியிக் கீழ் இயங்கும் பாதுகாப்புப் படையினர், வடக்கு – கிழக்கில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளையும் வீடுகளையும் அபகரிப்பதில் தொடர்ச்சியாக முனைப்புக்காட்டி வருகின்றார்கள் என வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.

vinthan-kanakaraththinam

இது தொடர்பில் அவர் ஞாயிற்றுக்கிழமை (12) வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,

வலிகாமம் வடக்கில் அமைந்துள்ள 6,386 ஏக்கர் நிலப்பரப்பை கையகப்படுத்தி 24 வருடங்கள் சென்றும் தொடர்ந்தும் அக்காணிகளையும் அவற்றில் அமைந்துள்ள வீடுகளையும் பொதுமக்களிடம் கையளிக்காமல் கையகப்படுத்தி வைத்துள்ளனர்.

இதனால் 24 கிராம அலுவலர் பிரிவுகளுக்குள்ளும் அடங்கும் 7,000 குடும்பங்களை சேர்ந்த கிட்டத்தட்ட 30 ஆயிரம் மக்கள் வாழ்விழந்து, தொழில் இழந்து, கல்வி இழந்து, வீடிழந்து அகதி முகாமிலும் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் வாடகை வீடுகளிலும் என சீரழிந்து கொண்டிருக்கின்றார்கள்.

இதேபோல, வட – கிழக்கில் எத்தனையோ ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஆக்கிரமிப்பின் பெயரால் அடிமையாக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்தான் எமது நாட்டின் ஜனாதிபதி கிளிநொச்சியில் காணி உரிமம் வழங்குகின்றார்.

வடக்கு மாகாணத்திற்கு முதலமைச்சர் இருக்கின்றார். இதே முதலமைச்சர் வடமாகாண காணி அமைச்சராகவும் இருக்கின்றார். மாகாண அரசுகளுக்கு காணி அதிகாரம் இருக்கின்றதென அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்திலே தெளிவாக கூறப்பட்டிருக்கின்றது.

கூடவே பொலிஸ் அதிகாரமும் இருக்கின்றது. ஆனால் பொலிஸ் அதிகாரத்தை மட்டும் தர மறுக்கிறார்கள். காணி அமைச்சராக இருக்கும் முதலமைச்சருக்கே தெரியாமல் கிளிநொச்சியில் வைத்து ஜனாதிபதி காணி உரிமம் வழங்குகின்றார்.

இந்த காணி உரிமங்கள் ஏற்கனவே காணி உரிமத்தை தொலைத்தவர்களுக்கு வழங்க உள்ளனரா? அல்லது பெரும்பான்மை இனத்தவரை குடியேற்ற காணி உரிமம் வழங்க உள்ளனரா? அல்லது வடபகுதியை சேர்ந்த காணி அற்றவர்களுக்கு புதிதாக காணி உரிமம் வழங்க உள்ளனரா? என எமக்கு புரியவில்லை.

இச்செயல்களெல்லாம் வட மாகாண காணி அமைச்சரான முதலமைச்சருக்கே தெரியாமல்தான் மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய செயல் மூலம் ஜனாதிபதியே வட மாகாண சபையை புறக்கணிக்கின்றார் என்றும் அதற்குரிய மதிப்பை அவர் கொடுக்கவில்லை என்பதும் தெளிவாக புரிகின்றது.

அவர் சட்டத்தை மீறி செயற்படுவது புலனாகிறது. காணி வழங்கும் நிகழ்வுக்கான அழைப்பிதழில் கூட காணி அமைச்சரான முதலமைச்சரின் பெயர் கூட இல்லை என்றால் எந்தளவுக்கு மத்திய அரசு எம்மை கீழ்த்தரமாக நடத்துகிறது என்பதை எம்மால் அவதானிக்க முடிகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts