செம்மணி வயல் காணியில் எரிபொருள் நிரப்பு நிலையம்!

Petrol-priceசெம்மணிப் பகுதியில் A9 பிரதான வீதியில் எரிபொருள் நிலையம் அமைக்கப்படவுள்ள காணி வயல்காணி என்று யாழ்.மாவட்ட காணிப் பதிவாளர் திணைக்களம் இனங் கண்டு, நல்லூர் பிரதேச சபைக்குத் தெரியப்படுத்தியுள்ளது.

வயல்காணியை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவதானால் அதற்கு கமநல சேவைகள் திணைக்களத்தின் அனுமதி பெறப்படவேண்டும் என்றும், குறிப்பிட்ட காணியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கு அவ்வாறான அனுமதி பெறப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

நல்லூர் பிரதேச சபையின் எதிர்ப்பையும் மீறி A9 பிரதான வீதியில் செம்மணிச் சந்திக்கு அருகிலுள்ள காணியில் எரிபொருள் நிலையம் அமைப்பதற்குரிய பணிகள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் பிரதேச சபையினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் இடம்பெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இந்த விடயம் ஆராயப்பட்டது. இதன் போது குறித்த காணி தன்னுடையது என்று தெரிவித்து ஒருவர் காணி உறுதியை எம்மிடம் சமர்ப்பித்துள்ளார் என்றும் அந்த உறுதியின் உண்மைத் தன்மை குறித்து அறிவதற்காக அது யாழ்.மாவட்ட காணிப்பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் நல்லூர் பிரதேச சபைத்தலைவர் தெரிவித்தார்.

இதற்கமைய மாவட்ட காணிப் பதிவாளர் திணைக்களத்தினர் உறுதியை ஆராய்ந்ததில், குறித்த காணி வயல் காணி என்று நல்லூர் பிரதேச சபைக்கு தெரியப் படுத்தி உள்ளனர்.

வயல் காணியை, அது தவிர்ந்த ஏனைய நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதாயின், மாவட்ட கமநல சேவைத் திணைக்களத்தின் அனுமதி பெறப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.