சூட்டுப் பயிற்சியால் மீனவருக்கு உயிராபத்து

தென்மராட்சி அல்லாரை தம்பு தோட்டப் படைமுகாமில் தினமும் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சியினால் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் உயிர் ஆபத்துக்களை எதிர்நோக்கும் அச்சத்துடன் படகுகளில் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டது.

சாவகச்சேரி கடலேரியிலிருந்து தினமும் மீனவர்கள் படகுகளில் மீன்பிடிக்கச் செல்வது வழமை. அங்குள்ள படைமுகாம் பயிற்சி நிலையத்திலிருந்து கடலை நோக்கித் துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இங்குள்ள கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் விடுத்த வேண்டுகோளையடுத்து வியாழக்கிழமை மாலையிலும் வெள்ளிக்கிழமை காலையிலும் தொழிலுக்குச் செல்லாத வேளையில் துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சிகள் நடத்தப்பட்டு வந்தன.

அண்மைக் காலமாகத் தினமும் காலையும் மாலையும் துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சிகள் வழங்கப்படுவதால் கடற்றொழிலாளர்கள் படகேறிச் செல்வதற்கு அச்சம் கொண்டுள்ளனர்.

கடலுக்குள் பயிற்சி எல்லை குறிப்பிட்டுள்ள பகுதிக்கு அப்பால் படகுகள் வந்தாலும் அதனைத் தாண்டித் துப்பாக்கி ரவைகள் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.