சுட்டி விளக்குகள் விற்ற வர்த்தகர் மீது தாக்குதல்

கார்த்திகை விளக்கீட்டுக்காக சுட்டி விளக்குகள் விற்பனை செய்து கொண்டிருந்த வர்த்தகர் ஒருவர் மீது யாழ்ப்பாணத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலிப்பகுதியில் சுட்டிவிளக்குகளை விற்றுக்கொண்டிருந்த வர்த்தகர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

புலனாய்வாளர்கள் என தங்களை அடையாளப்படுத்தி கொண்ட சிலரே அந்த வர்த்தகர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

கார்த்திகை விளக்கீட்டை முன்னிட்டு திருநெல்வேலிப்பகுதியில் சுட்டிவிளக்குகள் 2 ரூபா 50 சதம் முதல் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. ஒரு வியாபாரி மட்டும் விளக்கொன்றை 2 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த இடத்திற்கு வந்த சிலர் தங்களை புலனாய்வாளர்கள் என்று அடையாளப்படுத்திக்கொண்டு மாவீரர் தினத்திற்காகவா 2 ரூபாவிற்கு சுட்டிவிளக்குகளை மலிவாக விற்பனை செய்கின்றீர் என்று கேட்டு அவரை கம்பியால் தாக்கியுள்ளனர்.

இவ்வாறான செற்பாடுகளில் ஈடுபட்டால் சுட்டுவிடுவோம் என்ற அவர்கள் எச்சரிக்கை விடுத்து சென்றுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான வர்த்தகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts