Ad Widget

சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் வீரப்பன் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

சேலம் மாவட்டம், சாமிநாயக்கன்பட்டியை அடுத்துள்ள பெருமாள்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் பா.பன்னீர்செல்வி. இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

மலைவாழ்மக்கள் சமுதாயத்தில் முன்னேற்றம் காண பல உதவிகளை செய்து வருகிறேன். பெங்களூரை சேர்ந்த சிவபிரகாஷ் என்பவர் ‘கில்லிங் வீரப்பன்’ என்ற தலைப்பில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வீரப்பன் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக தயாரித்துள்ளார்.

verappan

இந்த படத்தில் தமிழ் மக்களை தரம் தாழ்த்தவேண்டும் என்ற நோக்கத்தில் குறிப்பாக குரும்பா என்ற மலைசாதி பெண்கள் ஆயுதங்களை தூக்கியதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. கன்னட மொழியில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் விளம்பர காட்சிகள் கடந்த ஜூலை மாதம் வெளியாகியுள்ளது.

அதில், கன்னட நடிகர் சிவராஜ்குமார் (மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன்), போலீஸ் அதிகாரி செந்தாமரை கண்ணன் என்ற பெயரில் இந்திய அதிரடிப்படை தலைமை தாங்கி, வீரப்பனை பிடித்ததாக காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

கடந்த அக்டோபர் மாதம் இந்த படத்தின் முழு விளம்பர காட்சியும் வெளியாகியுள்ளது. அதில் பல பொய் தகவல் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில், திடீரென இந்த திரைப்படம் வருகிற ஜனவரி 1-ந்தேதி நாடு முழுவதும் வெளியாகும் என்று விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் வீரப்பன் ஒரு கொடூர கொலைகாரன் என்பதை போலவும், 184 பொதுமக்கள், 97 போலீஸ்காரர்கள், 900 யானைகளை கொன்றதாகவும் கதை அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் சில மத ரீதியான காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

இதனால், கண்டிப்பாக மத ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படும். மேலும், இந்த படத்தின் இயக்குனர் ராம்கோபால் வர்மா, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் விதமான காட்சிகளை அமைத்துள்ளார்.

மேலும் வீரப்பன் மனைவி பலரை கொலை செய்வது போல, படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், உண்மையில் அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை. மேலும், இந்த படத்தில் தமிழக போலீசுக்கும், அரசியல்வாதிக்கும் எதிரான கருத்துகளும் இடம் பெற்றுள்ளது. அதேபோல, காவிரி விவகாரத்தில் நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டதாக கூறியுள்ளனர்.

இந்த படத்துக்கு சென்னையில் உள்ள தணிக்கை வாரியம் ‘யு’ சான்றிதழை வழங்கியுள்ளது. எனவே, இந்த பொய்யான தகவல்களுடன் இந்த படம் வெளியானால், தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்.

இந்த படத்துக்கு எப்படி யு சான்றிதழ் வழங்கப்பட்டது? என்பது குறித்து அறிக்கையை தாக்கல் செய்த தமிழக உள்துறை (சினிமா) செயலாளர், சென்னையில் உள்ள தணிக்கை வாரியம் மண்டல அதிகாரி ஆகியோருக்கு உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts