சம்புநாத ஈஸ்வரத்தில் 21 அடி உயர சிவனின் தியான சிலை

sampu 1இலங்கையிலேயே மிகவும் பழமையான சிவாலயமான சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரத்தில் சிவபெருமானின் 21 அடி உயரமான தியான சிலையொன்று நிறுவப்படவுள்ளது. சிவ தொண்டன் அமைப்பினால் நிறுவப்படவுள்ள இந்தச் சிலைக்கான அடிக்கல் நாட்டுவிழா ஆடிப்பிறப்பு தினமாகிய கடந்த புதன்கிழமை இடம்பெற்றது. மேற்படி ஆலய குரு முதல்வர் நரசிங்க சித்தர் சுவாமிகள் தலைமையில் இந்த அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றது.

நாட்டிலுள்ள சிவாலயங்களில் மிகவும் பழைமையான இந்த ஈஸ்வரம் பொன்னாலை – கீரிமலை வீதியில் திருவடிநிலை தீர்த்தக் கரைக்கு சமீபமாக பிரதான வீதியில் அமைந்துள்ளது. புராதன காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கிய இந்த ஈஸ்வரம் காலத்திற்கு காலம் இடம்பெற்ற கடல்கோள்களால் அழிவடைந்த நிலையில் வீதியை நோக்கியிருந்த நுழைவாயில் ஆலயம் மட்டுமே தற்போது எஞ்சியிருக்கின்றது.

இந்துக்களின் புனித பூமியாக உள்ள இந்த ஆலயத்தை மீண்டும் வழிபாட்டிடமாக மாற்றும் நோக்கத்துடனும் புராதன ஈஸ்வரத்தைப் அழியவிடாமல் பாதுகாக்கும் நோக்கத்துடனுமே இந்த ஆலயத்தில் சிவபெருமானின் மிகப் பெரிய தியான சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சிவதொண்டன் அமைப்பு தெரிவித்துள்ளது.

நாட்டில் வாழ்கின்ற மக்களிடையே இந்து மத சிந்தனைகள் பலவீனமடைந்து செல்வதாகவும் இதனாலேயே சமூகங்களிடையே அநீதிகள் தலைதூக்குவதாகவும் சிவதொண்டன் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், மாதகல், பண்டத்தரிப்பு, சாந்தை, பாண்டவெட்டை, சுழிபுரம், காட்டுப்புலம், பொன்னாலை, மூளாய் போன்ற பிரதேசங்களில் வசிக்கும் மக்களிடையே ஆன்மீக சிந்தனைகளை வளர்க்கும் செயற்பாட்டின் முதற்படியாகவே சம்புநாத ஈஸ்வரத்தில் குறித்த தியான சிலை நிறுவப்படவுள்ளதாகவும் சிவதொண்டன் அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இந்த சிலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் சிவதொண்டன் அமைப்பு, சிவத்தமிழ் மானிட விடியல் கழகம், இந்து மகாசபை, சிவ மங்கையர் அமைப்பு, கல்வி சுகாதார மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.