Ad Widget

சத்திர சிகிச்சைக்குப் பதிலாக ஊடுகதிரின் உதவியுடன் சிகிச்சை. இலங்கையில் புதிய அறிமுகம்

riley_IR_suite_hospitalபாரிய சத்திரசிகிச்சைகளுக்கு பதிலாக சிறிய துளையொன்றினூடாக ஊடு கதிரின் உதவியுடன் சிகிச்சையளிக்கக்கூடிய அதிநவீன தொழில்நுட்பம் இலங்கையில் முதற்தடவையாக த சென்றல் வைத்தியசாலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்நவீன தொழில்நுட்பத்தின் அறிமுகம் காரணமாக நோயாளிகள் அதிக பணம் செலவளித்து இச்சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல வேண்டிய நிலை இனி மேலும் ஏற்படாதென இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற டொக்டர் லக்மாலி பரணஹேவா கூறினார்.

உடலின் உள் உறுப்புக்களின் வெளிப்பாகத்தில் ஏற்படக்கூடிய இரத்தக் கசிவு, இரத்த ஓட்டம் இன்மை, கட்டிகள் மற்றும் நரம்புகள் தொடர்பிலான பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்நாட்டிலேயே சிகிச்சைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் “த சென்றல்” வைத்தியசாலை மேற்கத்தேய நாடுகளில் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தை இலங்கையிலும் அறிமுகம் செய்து வைத்துள்ளது.

இவ்விசேட சிகிச்சைக்கென Biplane Digital Subtraction Angiography Unit என்னும் தனித்துவமான பிரிவுக்கென ஆசிரி குரூப்ஸ் 150 மில்லியன் ரூபா பெறுமதியான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய Interventional Radiology பல இயந்திரம் ஒன்றினைக் கொள்வனவு செய்துள்ளது. இது தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று த சென்றல்வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போதே இயந்திரம் மற்றும் சிகிச்சை முறை தொடர்பில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

ஈரல், சுவாசப்பை மற்றும் குரல்வளை ஆகிய உறுப்புக்களில் ஏற்படக்கூடிய இரத்தக் கசிவுகள், இரத்த ஓட்டம் தடைபடுதல் உள்ளிட்ட நரம்பு தொடர்பான பிரச்சினைகளை சில சமயங்களில் சத்திர சிகிச்சை மூலம் கூட குணப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் சிறிய துளையொன்றினூடாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு ஊடுகதிரை செலுத்தி சிகிச்சை செய்ய முடிவதால் சத்திரசிகிச்சையின் போது எதிர்கொள்ளப்படும் அபாயத்தினளவு இங்கு பெரிதும் குறைக்கப்படுகிறது.

அத்துடன் தலையை தவிர்த்த உடலின் ஏனைய பாகங்களில் நரம்பு தொடர்பில் செய்யப்படும் ஊடுகதிர் சிகிச்சைக்கு நோயாளியை மயக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. வலியின்றி, பாரிய சிக்கல்களின்றி இலகுவாக செய்யப்படும் இந்நவீன சிகிச்சை முறையின் மூலம் நோயாளி குணமடைவதற்கான வாய்ப்புகள் ஒப்பீட்டளவில் அதிகமெனவும் இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் லக்மாலி தெரிவித்தார்.

மேலும் இறக்குமதி செய்யப்பட்டிருக்கும். இயந்திரம் முப்பரிமானத்தையும் படம் பிடித்துக் காட்டுவதுடன் சி.டி. ஸ்கேனையும் உடனுக்குடன் பெற்றுத்தரும் வசதி படைத்ததால் மிக நுட்பமாகவும் இலகுவாகவும் இந்த சிகிச்சையினை வழங்கக்கூடியதாகவிருக்குமென இதன் போது விளக்கமளித்த டாக்டர் கல்பா சுபசிங்ஹ கூறினார்.

இதற்கு முன்னர் கொண்டுவரப்பட்ட இயந்திரங்கள் ஒரு பக்கத்தை மாத்திரமே படம் பிடித்துக் காட்டுவதனால் தலையில் சிகிச்சை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் அதனை பல்வேறு திசைகளிலும் திருப்பி திருப்பி பார்க்க வேண்டியிருக்கும். இதற்கென எடுக்கும் சில செக்கன்களில் கூட நோயாளியின் உயிர் தங்கியுள்ளது. எனவே, தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த சீன தொழில்நுட்பம் துல்லியமான சிகிச்சை முறைக்கு வழிவகுக்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.

வைத்தியசாலை பணிப்பாளர் நிஹால் ரத்நாயக்க, மக்களுக்கு உள்நாட்டிலேயே சிறந்த சிகிச்சையைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்ற நோக்கிலேயே செலவீனத்தையும் கருத்திற் கொள்ளாது இந்த இயந்திரம் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக கூறினார். இதன் மூலம் எம் நாட்டவர்கள் இந்த சிகிச்சைக்காக வீணாக பணம் செலவழித்து வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை இனிமேலும் தொடராது எனவும் தெரிவித்தார். இந்தச் செய்தியாளர் மாநாட்டில் மருத்துவப் பணிப்பாளர் டாக்டர் ஹர்ஷா பர்னகே, பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி டாக்டர் மஞ்சுள கருணாரத்ன, டாக்டர் சாந்த ஹெட்டியாரச்சி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Posts