சண்டெல் நிறுவனத்தை வாங்குகிறது டயலொக்

இலங்கையின் முன்னிலை செல்லிடத் தொலைபேசி நிறுவனமான டயலொக் அக்ஸியா நிறுவனம், சிடிஎம்ஏ தொலைபேசி நிறுவனமான சண்டெல் பிரைவேட் லிமிடெட்டின் 100 சதவீத பங்குகளை கொள்வனவு செய்வதற்கான பேரங்களை பூர்த்திசெய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தமிழ் மிரரின் சகோதர ஆங்கில இணையத்தளமான டெய்லி மிரருக்குத் தெரிவித்தன.

இதற்கு முன்னரும் சண்டெல் நிறுவனத்தை வாங்குவதற்கு டயலொக் நிறுவனம் முயற்சித்தபோதிலும் விலை மற்றும் ஒழுங்குபடுத்தல் விவகாரங்கள் காரணமாக அம்முயற்சிகள் தோல்வியுற்றன. எனினும் இம்முறை அச்சிக்கல்களை டயலொக் நிறுவனம் தீர்த்துக்கொண்டுள்ளதாக அறியமுடிகிறது.’விலை விவகாரங்களுக்கு அப்பால் இம்முறை இந்த கொள்வனவுக்கு ஒழுங்குபடுத்துநரிடமிருந்து அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால் இப்போது சகல சிக்கல்களும் தீர்க்கப்பட்டுள்ளன. உரிய அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக டயலொக் நிறுவனம் விரைவில் உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என அவ்வட்டாரம் தெரிவித்தது.

சில வருடங்களுக்குமுன் சிடிஎம்ஏ தொலைபேசி செழிப்பு முடிவடைந்தவுடன் சண்டெல் நிறுவனத்தை விற்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.இலங்கை மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 7 இற்கு மேற்பட்ட நிறுவனங்கள் சண்டெல் நிறுவனத்தை வாங்க முயற்சித்தன.மஹாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட், டாட்டா கொமியூனிகேஷன்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், மலேஷியா டெலிகொம், ஸ்ரீலங்கா டெலிகொம், வெல்லிபெல் வன் பி.எல்.சி. ஆகிய நிறுவனங்களும் இவற்றில்அடங்கும்.

சண்டெல் நிறுவனம் தற்போது சுவீடனின் ஓவர்சீஸ் டெலிகொம் ஏ.பி. நிறுவனத்தின் தலைமையில் பல நிறுவனங்களுக்குச் சொந்தமாகவுள்ளது.1996 ஆம் ஆண்டு இறுதியில் இலங்கையில் செயற்படத் தொடங்கிய சண்டெல் நிறுவனம் இலங்கையின் மூன்றாவது மிகப்பெரிய தொலைபேசி நிறுவனமாக விளங்கியது. 2008 ஆம் ஆண்டு சுமார் 5 லட்சம் வாடிக்கையாளர்களை அந்நிறுவனம் கொண்டிருந்ததாக மதிப்பிடப்பட்டிருந்தது. (IS)

Related Posts