Ad Widget

சங்கா , மஹேலவின் நிறுவனத்திற்கு தடை!

அண்மையில் வௌிநாட்டுப் பாடகர் ஒருவரை அழைத்து வந்து, இசை நிகழ்ச்சி நடத்திய நிறுவனத்தை தடைசெய்யப்பட்ட பட்டியலில் இணைக்கவுள்ளதாக, கொழும்பு மாநகரசபை மேயர், ஏ.ஜே.எம்.முஸாம்மில் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற உலகப் புகழ் பெற்ற பாடகரான என்ரிக் இக்லேசியஸ் கலந்து கொண்டிருந்த இசை நிகழ்ச்சியை, லைவ் இவன்ஸ் (Live Events) எனும் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர்களாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் பிரபல வீரர்களான மஹேல ஜெயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் கடமையாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், சம்பந்தப்பட்ட இசை நிகழ்ச்சிக்காக விற்கப்பட்ட பிரவேச அனுமதிச் சீட்டுக்களுக்காக, மாநகரசபைக்கு வழங்க வேண்டிய வரியில், 29 மில்லியன் ரூபாய் வழங்கப்படவில்லை என, கடந்த காலங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

மேலும், இந்த நிகழ்சியைக் காண வந்திருந்த, சில பெண்கள் மிகவும் மோசமாக நடந்து கொண்டிருந்ததாகவும், இது இளம் சமூகத்தை தவறாக வழிநடத்தக் கூடியதாக இருந்ததென்றும் சர்ச்சைகள் வௌியானமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இதன்போது பெண்ணொருவர், பாடகரின் மீது தனது உள்ளாடையை கழற்றி வீசியதாகவும் கூறப்படுகிறது.

இதுஇவ்வாறு இருக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இது தொடர்பில் தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

நாட்டின் கலாச்சாரம், நாகரீகம் என்பவற்றை சீர்குழைக்கும் விதமாக சர்வதேச பாடகர்களைக் கொண்டு நடத்தப்படும் நாகரீகமற்ற இசைக் கச்சேரிகளுக்கு இனிமேல் அனுமதி வழங்குவதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் இந்தக் கருத்துத் தொடர்பிலும் சமூக வலைத் தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் வௌியானது.

இந்தநிலையில் இன்று இது குறித்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றை கொழும்பு மாநகர சபை மேயர் முஸாம்மில், நடத்தியுள்ளார்.

இதன்போது, குறித்த இசை நிகழ்சிக்காக வழங்கப்பட வேண்டிய வரிப் பணத்தில் 29 மில்லியன் ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் இதனை வழங்க இரு வாரங்கள் அவகாசம் வழங்குவதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு செய்யத் தவறின், சம்பந்தப்பட்ட நிறுவத்தை தடைசெய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கவுள்ளதாகவும், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வரிப் பணத்தை செலுத்தாத பட்சத்தில், சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அவதானம் செலுத்தவுள்ளதாகவும், கொழும்பு மாநகரசபை மேயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், குறித்த நிகழ்சிக்காக வழங்கப்பட்ட 7000 பிரவேச அனுமதிச் சீட்டுக்களில் மட்டுமே மாநகர சபையின் முத்திரை இருந்ததாகவும், 3000 சீட்டுக்களில் அவ்வாறன முத்திரை இல்லை என சந்தேகிப்பதாகவும், இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறப்பட்டுள்ளது.

Related Posts