கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்குமாறு கோரி யாழ். பல்கலைக்கழகத்தில் அமைதிப் போராட்டம்

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தியும், அண்மைக்காலமாக பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைக் கண்டித்தும் யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அமைதிப் போராட்டமொன்று இன்று நடாத்தப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட விரிவுரையாளர்கள், ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் என பலரும் இந்த அமைதிப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

“பல்கலைக்கழகம் என்ன கோமாளிகளின் கூடமா?”, “மாணவர்கள் சிறையில் நிர்வாகம் விடுமுறையில்” போன்ற சுலோக அட்டைகளைப் போராட்டத்தில் பங்குபற்றியவர்கள் தாங்கியிருந்தனர்.

பல்கலைக்கழக சூழலில் கடந்த நவம்பர் 27, 28 ஆம் திகதிகளில் இடம்பெற்ற விரும்பத்தகாத வன்முறைகளையும், ஆயுத அடக்கு முறையையும் வன்மையாகக் கண்டித்த விஞ்ஞான ஆசிரியர்கள் சங்கம், அப்பாவி மாணவர்கள் மீது திட்டமிட்டுப் பழிகள் சுமத்தப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியது.

மாணவர்களுக்குத் தொடர்பில்லாத வகையில் வளாகத்துக்கு அண்மித்து அமைக்கப்பட்டிருந்த சிறீரெலோ இயக்க காரியாலயம் மீது நடத்தப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதலைக் காரணம் காட்டி, எந்த விதமான ஆதாரமும் அற்ற முறையில் மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அத்துடன் வெள்ளைத்துண்டில் 10 மாணவர்களின் பெயர்களை எழுதிக் கொடுத்து, அவர்களைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கோரியிருக்கின்றனர். இத்தகையதொரு அறிவித்தல் கிடைத்ததும், மாணவர்களை ஒப்படைப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 5 மாணவர்களும், வணிக முகாமைத்துவ பீட மாணவன் ஒருவனும் நிர்வாகத்தினரால் நேற்று யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர்.

ஏற்கனவே மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களை இன்று விடுகிறோம், நாளை விடுகிறோம் என்று சாட்டுபோக்குச் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், ஏனைய மாணவர்களையும் நிருவாகம் கையளிக்கத் துடித்துக் கொண்டு நிற்பது கண்டிக்கத்தக்கதொன்றாகும் என்று விஞ்ஞான பீட ஆசிரியர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில் இத்தகைய சம்பவங்களைக் கண்டித்தும், எதிர்காலத்தில் மாணவர்களின் கைதுகளைத் தடுக்கக் கோரியுமே இன்றைய போராட்ம் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது.போராட்டத்தின் முடிவில் இலங்கை ஜனாதிபதியின் கவனத்துக்கு சம்பவத்தைக் கொண்டுவரும் முயற்சியாக மகஜர் ஒன்றைக் கையளிப்பதற்கும் முடிவு செய்யப்பட்டது.

இன நல்லிணக்கம் என்ற சொல் இத்தகைய நடவடிக்கைகளால் குழம்பிப் போகும் அபாயமிருப்பதாக குறிப்பிடும் அந்த மகஜரில் பல்கலைக்கழக சமூகத்தினர் அனைவரிடமிருந்தும் கையெழுத்துப் பெறப்பட்டு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

மாணவர்களின் தொடர்ச்சியான வேண்டுகோளின் பேரில் அவர்களின் பாதுகாப்புக்கருதியே மாணவர் ஒப்படைப்பு இடம்பெற்றதாக முன்னர் செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.ஒப்படைக்காத பட்சத்தில் மாணவர்கள் வீட்டில் வைத்து கைது செய்யப்படும் ஏது நிலை இருந்ததாக உயர் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன!பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் ஆசிரியர் சங்கத்துக்கும் இடையில் சரியான உறவு இல்லாதிருப்பதனையே நிர்வாகத்திற்கெதிரான குற்றச்சாட்டுக்கள் எடுத்துக்காட்டுவதாக சில பல்கலை கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: Editor