கேரள கோர்ட் தீர்ப்பால் த்ரிஷ்யம் ரீமேக்கிற்கு சிக்கல்

மோகன்லால், மீனா நடித்த த்ரிஷ்யம் படம் கேரளாவில் வரலாறு காணாத வெற்றியை பெற்றது. ஜீது ஜோசப் இயக்கி இருந்தார். இந்த படத்தை ஸ்ரீப்ரியா தெலுங்கில் ரீமேக் செய்தார் அங்கும் பெரிய ஹிட்டானது. கன்னடத்தில் பி.வாசு ரீமேக் செய்து வருகிறார்.

kamal

அடுத்து தமிழில் கமலஹாசன், கவுதமி நடிக்க ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் த்ரிஷ்யம் படம் ஒரு மலையாள நாவலை காப்பி அடித்து எடுக்கப்பட்டுள்ளது என்று கேரள கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

கேரள மாநிலம் கோதமங்கலத்தை சேர்ந்த இயக்குனர் சதீஷ்பால் என்பவர் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:

நான் “ஒரு மழை காலத்தில்” என்ற நாவலை எழுதியிருக்கிறேன். அந்த நாவலை மையமாக வைத்துதான் த்ரிஷ்யம் படம் எடுக்கப்பட்டுள்ளது.

அந்த கதையை நான் தமிழில் சென்னை க்ரைம் ஸ்டோரி என்ற பெயரில் திரைப்படமாக எடுக்க முடிவு செய்திருந்தேன். இந்த நிலையில் இயக்குனர் ஜீது ஜோசப் என் கதையை மலையாளத்தில் படமாக எடுத்ததோடு தமிழிலும் கமலஹாசனை வைத்து எடுப்பதாக அறிந்தேன்.

எனவே நான் தமிழில் இயக்க இருந்த படத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே காப்புரிமை சட்டப்படி இயக்குனர் ஜீது ஜோசப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி சந்தோஷ் ஒரு மழை காலத்தில் நாவலையும் படித்தார். த்ரிஷ்யம் படத்தையும் பார்த்தார். அதன் பிறகு இந்த வழக்கில் அவர் தீர்ப்பளித்தார். தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது:

டைரக்டர் சதீஷ்பாலின் கதையை மையமாக வைத்துதான் த்ரிஷ்யம் படம் எடுக்கப்பட்டுள்ளது. இது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது. எனவே த்ரிஷ்யம் படத்தை தமிழில் எடுக்க கூடாது. அப்படி எடுக்க வேண்டும் என்றால் இயக்குனர் ஜீது ஜோசப் 10 லட்சம் ரூபாயை நீதிமன்றத்தில் கட்ட வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இதனால் த்ரிஷ்யம் ரீமேக்கில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.