கூட்டமைப்பு அரசுடன் இணைந்து செயற்படப் போவதில்லை! – சீ.வி.விக்னேஸ்வரன்

கிழக்கு மாகாணம் வடக்குடன் இணைந்து செயற்பட வேண்டுமென நினைத்தால் வடமாகாணமும் அதற்கு சம்மதிக்குமானால் அரசாங்கம் அதனை கட்டாயம் நிறைவேற்றியாக வேண்டும். என்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

vickneswaran

அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டிய அவசியம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு இல்லை. இணைந்து செயற்படப் போவதுமில்லை. நாம் சட்டத்தின் அடிப்படையிலேயே எமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இதில் யாருடைய தலையீடும் அல்லது அடக்குமுறையும் இருக்கக் கூடாதென்பதே எமது பிரதான நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கான விசேட பூஜை வழிபாடொன்று நேற்று கொழும்பு கொச்சிக்கடை அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்ட வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பூஜையின் பின்னர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த விசேட செவ்வியில் குறிப்பிடுகையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தமிழ்க் கட்சிகள் பலவற்றை உள்ளடக்கிய மக்கள் கூட்டமைப்பாகும். இதில் தமிழரசுக் கட்சியும் ஒரு கூட்டுக்கட்சியாகவே நாம் கருதுகின்றோம். தமிழரசுக்கட்சி தனித்து செயற்படுகின்றது என்ற கூற்றினை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

வட மாகாண சபையினை பொறுத்தவரையில் ஒவ்வொரு கட்சியிலுமுள்ள அங்கத்தவர்களுக்கு அமைச்சுப் பதவி கொடுத்து ஆட்சி நடத்துவது கடினமானது. நாம் எமக்கு கிடைத்துள்ள பதவிகளை கட்சி அடிப்படையில் பார்க்காது தகுதியடிப்படையிலேயே பார்க்கின்றோம்.

இதன் காரணத்தினாலேயே அண்மைக்காலங்களில் கட்சிக்குள் சில கருத்து முரண்பாடுகளும், மனஸ்தாபங்களும் ஏற்பட்டன. எனினும் இன்று எமது கூட்டமைப்பு ஒற்றுமையாகவே செயற்பட ஆரம்பித்துள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு எம்மை அரசாங்கம் அழைத்திருப்பதற்கான தாற்பரியம் என்ன என்பது எம்மால் இன்னமும் புரிந்துகொள்ள முடியவில்லை. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நாம் கலந்துகொள்வது தொடர்பில் எமது கட்சியில் கலந்துரையாடிய பின்னர் இது தொடர்பிலான முடிவுகளை எடுக்க முடியும்.

வெறுமனே அரசியல் காரணங்களினால் முரண்டு பிடித்துக் கொண்டு அரசாங்கத்தை பகைத்துக் கொள்வதினால் எவ்வித அர்த்தமுமில்லை. அதனால் நாம் அரசாங்கத்தை எதிர்க்கப் போவதுமில்லை.

ஆகவே, முடிந்தவரை அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு வடமாகாணத்தில் எம்மக்களுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.

கடந்த காலத்தில் முஸ்லிம் தலைமைகள் அம்மக்களுக்கு பாதுகாப்பையும் அவர்களுக்கான உரிமைகளையும் பெற்றுக் கொடுக்காத காரணத்தால் முஸ்லிம் மக்கள் பெரும் துன்பத்திலிருந்தனத். அச்சந்தர்ப்பத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்து அவர்களின் பிரச்சினைகளையும் சர்வதேசம் வரை எடுத்துச் சென்றுள்ளார்.

இதன் காரணத்தினால் முஸ்லிம் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதும் அதன் தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

எனவே, தமிழ் முஸ்லிம் மக்களை இணைத்து அனைவருக்குமான நல்லதொரு ஆட்சியினை வடக்கு மற்றும் கிழக்கில் அமைத்து அவர்களை பாதுகாப்போம் என அவர் குறிப்பிட்டார்.