யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் வாள்வெட்டுக்கள், கொள்ளைச் சம்பவங்களை உடனே தடுத்து நிறுத்துமாறு பிரேரணை ஒன்று முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை காவல்துறை மா அதிபருக்கும் அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இப்பிரேரணை கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வடமாகாண சபையின் 52ஆவது அமர்வில் வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்களால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. வடக்கில் அண்மைக்காலமாக நடைபெற்றுவரும் குற்றச்செயல்கள் காரணமாக இந்த பிரேரணை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பில் சிவாஜிலிங்கம் உரையாற்றுகையில்,
யாழில் அண்மைக்காலமாக வாள்வெட்டு, கொள்ளைச் சம்பவங்கள் போன்ற பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. இதனை சகித்துக்கொண்டு வாழும் நிலையில் மக்கள் இல்லை. இவ்வாறான சமூகச் சீரழிவுகள் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கின்றது. போருக்குப் பின்னரே எமது பகுதியில் இவ்வாறான குற்றச் செயல்கள் அதிகமாக நடைபெறுகின்றது. போதைப்பொருள் பாவனை, சாதியம் எனும் பெயர்களால் குற்றச்செயல்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு மக்களின் பங்களிப்புக் கிடைப்பதில்லை. ஒருவீட்டில் கொள்ளை நடக்கிறதென்றால், அயல் வீட்டுக்காரர் தன்வீட்டில் நடக்கவில்லைத்தானே என தன்பாட்டில் இருப்பர். இதனால் வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுங்கள் எனக் கோரும் நாங்களே இராணுவத்தினரை மீண்டும் அழைக்கும் நிலை வந்துள்ளது. இல்லையென்றால் தற்பாதுகாப்புக்காக மக்கள் ஆயுதம் ஏந்தும் நிலை தவிர்க்கமுடியாததாகிவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்படுபவர்களுக்கு சட்டத்தரணிகள் முன்னிலையாவதில்லை எனத் தீர்மாத்திருப்பதைப்போன்று வாள்வெட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச்செயல்கள் தொடர்பிலும் சட்டத்தரணிகள் முன்னிலையாவதைத் தவிர்க்கவேண்டும். இது ஒரு பாரதூரமான விடயமாகையால், இதனைக் கட்டுப்படுத்த சிறீலங்கா அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோருக்கு இந்தச் சபை வேண்டுகோள் விடுக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.