குடும்பத்தைக் கடத்தி கப்பம் வாங்கிய இருவர் இரண்டு வருடங்களின் பின்னர் சிக்கினர்

arrest_1படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மகனை மீட்டுத் தருவதாகத் தொலைபேசியில் தெரிவித்து அந்தக் குடும்பத்தைக் கொழும்புக்குக் கடத்திச் சென்று 28லட்சம் ரூபாவைப் கப்பமாகப் பெற்ற இருவரைச் சாவகச்சேரிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்று இரண்டு வருடங்களுக்குப் பின்னர் இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு குறித்த குடும்பத்துக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியவர்கள் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்களின் மகனை மீட்டுத் தருவதாகவும் அதற்காகக் குறித்த தொகைப் பணத்துடன் கொழும்புக்கு வருமாறும் கூறியுள்ளனர்.

இதன்படி குடும்பத்தினர் மூவர் கொழும்பு சென்ற போது அங்கு வைத்து அவர்கள் வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டு 28 லட்சம் ரூபா கப்பமாகப் பெறப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

அப்போது இந்தச் சம்பவம் சாவகச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து சாவகச்சேரிப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. இது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சேரிப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் சம்பவத்துடன் தொடர்புடைய முஸ்லிம் நபரான முகமட் என்பவரைக் கைது செய்து கடந்த செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிவான் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் அடையாள அணிவகுப்பை நடத்துமாறு கோரியிருந்தார். இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய தமிழ்ப் பெண் ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதிவான் இருவரையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் அடையாள அணிவகுப்பையும் அன்றைய தினம் ஏற்பாடு செய்யுமாறு பணித்தார்.