கிளிநொச்சியில் வைத்தியர் இல்லாததால் உயிர் பறிபோனது

கிளிநொச்சி பூநகரி பகுதியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து, பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

பூநகரி 4ஆம் கட்டையைச் சேர்ந்த சந்திரலோகராசலிங்கம் நிர்மலா (வயது-55) என்ற குறித்த பெண், நண்பர் ஒருவரது மோட்டார் சைக்கிளில் சென்றபோது தவறி விழுந்துள்ளார். படுகாயங்களுக்கு உள்ளான அவரை அவரது நண்பர் பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போது, அங்கு வைத்தியர் இருக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து அவர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். எனினும், கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளார்.

பூநகரி வைத்தியசாலையில் உள்ள வைத்தியர் விடுமுறையில் சென்றுள்ள நிலையில், அவருக்கு பதிலீடாக யாரும் நியமிக்கப்படவில்லை. குறித்த வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் இருந்திருந்தால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். அத்தோடு, அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்றவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

Related Posts