கரவெட்டி பிரதேசசபையில் தீக்குளிக்க முயன்ற பெண்ணினால் பரபரப்பு!

கரவெட்டி பிரதேசசபையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கப் போவதாக பெண்ணொருவர் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லியடியில் தமது பழக்கடையை கரவெட்டி தவிசாளர் அகற்றியதாக குறிப்பிட்ட அந்த பெண், அதை மீள அமைக்க அனுமதிக்கப்படா விட்டால் தீக்குளிக்கப் போவதாக தெரிவித்தார்.

நெல்லியடி சந்தைக்கு அண்மையாக கடையொன்றை வாடகைக்கு பெற்றுள்ள முஸ்லிம் குடும்பமொன்று, அதில் பழைய இரும்பு பொருட்களை சேகரிப்பதுடன், பழக்கடையொன்றையும் நடத்தி வருகிறார்கள். அவர்கள் பழங்களை செயற்கையாக பழுக்க வைப்பதில்லையென குறிப்பிட்டு, அதிகமானவர்கள் அந்த கடையிலேயே பழங்களை கொள்வனவு செய்வது வழக்கம்.

நெல்லியடி சந்தையை சுற்றிலும் வீதியோரமாக உள்ள பழக்கடைகள், மரக்கறி கடைகளை அகற்றுமாறு சந்தை வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர். தமது சந்தை வியாபாரம் பாதிக்கப்படுவதால், சந்தை குத்தகையை செலுத்த முடியாமலுள்ளதாக குறிப்பிட்டு வந்தனர்.

சில வருடங்களாக இந்த இழுபறி நீடித்து வந்த நிலையில், சந்தையை சூழவுள்ள கடைகளை அகற்றும்படி கரவெட்டி பிரதேசசபை தவிசாளர் த.ஐங்கரன் அறிவித்திருந்தார். சந்தைகளிலிருந்து 500 மீற்றர் எல்லைக்குள் பழ, மரக்கறி கடைகளை நடத்த முடியாதென்ற சட்ட ஏற்பாட்டை சுட்டிக்காட்டி, வர்த்தக நிலையங்களிற்கு எழுத்துமூலமாக சில முறை அறிவித்தல்கள் வழங்கப்பட்டது.

எனினும், கடைகள் அகற்றப்படாததையடுத்து, நேற்று அவை அகற்றப்பட்டன.

கடைகளை அகற்ற, குறிப்பிட்ட பழக்கடையை நடத்தியவர்கள் மறுப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து நெல்லியடி பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு, பொலிஸ் பாதுகாப்புடன் 8 பழக்கடைகள், மரக்கறி கடைகள் அகற்றப்பட்டுள்ளன.

தற்கொலை மிரட்டல் விடுத்த பெண் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு எச்சரித்து விடுவிக்கப்பட்டார்.

Recommended For You

About the Author: Editor