ஆயுதம் ஏந்தியிருந்த நிலையில் தம்மை இராணுவம் என அடையாளப்படுத்தியவர்கள் இரவு நேரத்தில் என் வீட்டுக்கு வந்து தூங்கிக்கொண்டிருச்த எனது மகனை இழுத்து சென்றதுடன் மறுநாள் காலை மூன்று பேர் எனது வீட்டுக்கு வந்து தொலைபேசியையும் எடுத்துச் சென்றனர்.
அந்த மூன்று பேரையும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) அலுவலகத்தில் கண்டேன்’ என, தாயாரான முத்துலிங்கம் கொலஸரிக்கா, ஜனாதிபதி ஆணைக்குழு முன் சனிக்கிழமை (12) சாட்சியம் அளித்தார்.
காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள், யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை (11) ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
இரண்டாம் நாள் அமர்வு, யாழ். மாவட்ட செயலகத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற போது, சாட்சியமளிக்கும் போதே அந்தத் தாய் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து சாட்சியம் அளிக்கையில், ‘எனது மகன் முத்துலிங்கம் மலரவன் (காணாமல் போகும் போது வயது 19) கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் திகதி கொழும்புத்துறை ஈச்சமோட்டை பகுதியில் வீட்டில் வைத்து பிடிக்கபட்டார். அன்றைய தினம் இரவு 10.30 மணியிருக்கும் வீட்டுக்குள் துப்பாக்கிகளுடன் சிவில் உடை தரித்த ஏழு பேர் எனது மகனை வலுக்காட்டாயமாக அச்சுறுத்தி இழுத்துச்சென்றனர். இழுத்துச் செல்லும் போது விடுவதாக கூறினர். ஆனால் மகன் திரும்பி வரவில்லை.
ஆனால், எனது வீட்டையும் மகனையும் காட்டிக்கொடுத்தவர் தற்போது சுதந்திரமாக வெளியில் உள்ளார். அவர் கொய்யாதோட்டம் பகுதியில் கடை நடத்துகிறார். மகனை இழுத்துச் செல்லும் போது வீட்டைசுற்றி சீருடையுடன் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
‘நீங்கள் கூறும் இடத்துக்கு மகனை அழைத்து வருகிறேன் அவனை விட்டுவிடுங்கள் என நான் கூறியும் அவர்கள் கேட்கவில்லை.’மறுநாள் காலை சிவில் உடையில் மூன்றுபேர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்தனர்.
ஆயுத்தை காட்டி அச்சுறுத்தி எம்மை வெளியில் செல்லும்படி கூறிவிட்டு வீட்டுக்குள் இருந்த தொலைபேசியினை எடுத்த சென்றனர். இந்த சம்பவம் இடம்பெற்று இரண்டு வாரங்களில் மூவரும் ஈ.பி.டி.பி அலுவலகத்தில் நிற்பதை கண்டேன்.
என் மகன் தொடர்பாக ஈ.பி.டி.பி யினரிடம் சென்று விசாரித்தேன் மகனை நாம் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டனர். ஆனால், மலரவனை நாம் தூக்கிவிட்டோம் என்று தனக்கு இராணுவம் தொலைபேசியில் கூறியதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் றீகனின் சகோதரர் என்னிடம் கூறினார்.
எனவே, எனது மகன் பிடிக்கபட்ட சம்பவத்தின் பின்னணியில் ஈ.பி.டி.பி இருக்கலாம்’ என்று அத் தாயார் சாட்சியம் அளித்துள்ளார்.