ஊடகவியலாளன் என்பவன் ஓர் தகவல் களஞ்சியமாக இருக்கவேண்டும் – தவராசா

ஏறத்தாழ இன்றிலிருந்து 6000 வருடங்களுக்கு முன்புதான் இந்த எழுத்து என்பது பல இடங்களில் மனிதனினால் முதல் முதல் பதியப்பட்டதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த எழுத்தை என்றைக்கு மனிதன் ஆரம்பித்தானோ அன்று தொடக்கம் தன்னுடைய அந்த அறிவை, எண்ணங்களை களஞ்சியப்படுத்த மனிதன் தொடங்கினான். அந்த ஆற்றல்தான் மனிதனுடைய பரிணாம வளர்ச்சியின் அடுத்த ஒரு கட்டம் என வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் தவராசா தெரிவித்துள்ளார்.

thavarasa

மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் எழுதிய “என் எழுத்தாயுதம்” (ஒரு பத்திரிகையாளனின் பட்டறிவுப் பகிர்வு) நூல் வெளியீட்டு விழா கொழும்பு, பம்பலப்பிட்டி, சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நான் ஒரு ஊடகவியலாளர் அல்ல. ஆனால் எனக்கு ஊடகத்துறையில் ஒரு சிறு அனுபவம் இருக்கின்றது. ஆயுத பயமுறுத்தலில் இருந்து தப்புவதற்காக நான் ஒரு குறிப்பபிட்ட காலம் வெளிநாட்டில் இருந்தேன். அது எழுத்தாயுதம் அல்ல. மற்றைய ஆயுதம். அப்போது நான் லண்டனில் ‘East Ham’ என்ற இடத்தில் வாழ்ந்து வந்தேன். நான் இருந்த இடத்திற்கு அன்மையில் ‘University of East London’ என்ற ஓர் பல்கலைக்கழகம் இருக்கின்றது. அங்கு பயிலும் journalist (ஊடகவியல்) மாணவர்கள் சிலர் என்னுடன் இருந்தார்கள். அவர்களுக்கு நான் “Coursc Work” என்று சொல்லப்படுகின்ற பல்கலைக்கழக தேவைக்குரிய பாட விடயங்களை ஆங்கிலத்தில் எழுதிக் கொடுப்பேன். அப்போதுதான் அவர்களுடைய, அங்கத்தைய பல்கலைக்கழக தராதரத்தில், ஊடகவியலாளர் என்பவர் ஓர் அறிவுக் களஞ்சியமாக இருக்க வேண்டும் என்பதனை நான் புரிந்து கொண்டேன். நானும் இங்கு ஊடகவியலாளர்களை சந்திக்கின்றேன். தமிழ் ஊடகவியலாளர்கள் பேட்டி காண வருகின்றார்கள். அரசியல் அமைப்பு என்றால் என்ன என்று தெரியாது.

13 ஆவது திருத்தச் சட்டம் என்றால் என்ன என்று தெரியாது. பட்ஜட் என்றால் என்ன என்று தெரியாது. ஆனால் எங்களை பேட்டி கான வருகின்றார்கள் ஊடகவியலாளர்கள் என்று சொல்லிக் கொண்டு. பேனை பிடிக்கத் தெரிந்தால், தமிழ் எழுத தெரிந்தால் ஊடகவியலாளர் என்று இன்று தமிழ் ஊடகவியலாளர்களின் நிலை. நான் அங்கு தெரிந்து கொண்டது ஒரு ஊடகவியலாளராக வருவது என்றால் அவர் ஒரு அறிவு களஞ்சியமாக இருக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.