இ.போ.ச பஸ்கள் மீது கல்வீச்சு

இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலைக்கு சொந்தமான இரண்டு பஸ்கள் மீது ஞாயிற்றுக்கிழமை (19) மாலை வடமராட்சி, முள்ளிவெளி பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் திங்கட்கிழமை (20) தெரிவித்தனர்.

வவுனியாவிலிருந்து பருத்தித்துறை நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ் மீது மாலை 4.45 மணியளவிலும், கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ் மீது மாலை 5.00 மணியளவிலும் இந்த கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முகத்தை துணியால் கட்டியபடி வந்த இரண்டு பேரே இவ்வாறு கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

முதலாவதாக கல்வீச்சு தாக்குதலுக்குள்ளான பஸ்ஸின் தகரத்திலமைந்த பாகங்கள் நெளிந்துள்ளதுடன், இரண்டாவதாக கல்வீச்சுக்குள்ளான பஸ்ஸின் சாரதி இருக்கையின் பக்க கண்ணாடிகள் சேதமடைந்தன.

தாக்குதலுக்குள்ளான பஸ்களில் பயணித்த பயணிகளை உரிய இடங்களிற்கு கொண்டு சென்று இறக்கிவிட்ட பின்னர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.